
மதுரை: நவ. 8-
தீபாவளி பண்டிகை நாளில் மதுரை மாவட்டம் மேலூர் அருகே நடந்த சாலை விபத்தில் தந்தை, மகன் உட்பட 3 பேர் உயிரிழந்தனர். இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலூர் அருகே அழகர்கோவில் சாலையில் இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. ஒரு இருசக்கர வாகனத்தில் ஆறுமுகமும், அவரது மகன் லோகேஷும் பயணம் செய்தனர். மோதலின் தாக்கத்தில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த நவீனும் விபத்தில் உயிரிழந்தார். தீபாவளி நாளில் இறைச்சி வாங்குவதற்காக மூவரும் இருசக்கர வாகனங்களில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்த லோகேஷ், மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்தவர் என்பதும், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. நவீன், வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் நிரப்பும் ஊழியராகப் பணியாற்றி வந்துள்ளார்.
விபத்து குறித்து தகவல் அறிந்த மேலூர் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். உயிரிழந்த ஆறுமுகம், லோகேஷ் மற்றும் நவீன் ஆகிய மூவரின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீபாவளி பண்டிகை நாளில் ஒரே சாலை விபத்தில் தந்தை, மகன் உட்பட மூவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.













