Home மாவட்டங்கள் சென்னை நாடு முழுவதும் உற்சாகமாக தீபாவளி கொண்டாட்டம்

நாடு முழுவதும் உற்சாகமாக தீபாவளி கொண்டாட்டம்

சென்னை, நவ. 8-
நாடு முழுவதும் மக்கள் புத்தாடை அணிந்து, இனிப்புகளைப் பரிமாறி, பட்டாசுகள் வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். ஹிந்துக்களின் புனிதப் பண்டிகையான தீபாவளி, வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்படுகிறது.தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி அமாவாசை திதியில் கொண்டாடப்படுகிறது. வாழ்க்கையில் நிலவும் துன்பம் என்ற இருளை நீக்கி, மகிழ்ச்சி என்ற ஒளியை வழங்கும் பண்டிகையாக இது கருதப்படுகிறது. இந்நன்னாளில் மக்கள் அதிகாலை எழுந்து எண்ணெய் குளியல் செய்து, புத்தாடை அணிந்து, பலகாரங்கள் மற்றும் உணவுப் பொருட்களை இறைவனுக்குப் படைத்து மகிழ்கின்றனர். பெரும்பாலானோர் கோவில்களுக்குச் சென்று இறைவனை வழிபட்டு வருகின்றனர்.
வீடுகளில் தீபாவளி பண்டிகைக்காகத் தயாரிக்கப்பட்ட பலகாரங்கள் மற்றும் இனிப்புகளை உறவினர்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினருடன் பகிர்ந்து கொள்கின்றனர். குடும்பத்தினருடன் ஒன்றுகூடி புத்தாடை அணிந்து, ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இன்று காலை மற்றும் மாலை என இரு வேளைகளிலும் மக்கள் பட்டாசுகளை வெடித்தும், மத்தாப்புகளை கொளுத்தியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். பல்வேறு பகுதிகளில் வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தீபங்கள் ஏற்றப்பட்டுள்ளன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்தினருடன் இணைந்து பண்டிகை மகிழ்ச்சியில் பங்கேற்று வருகின்றனர். இந்தியாவில் ஹிந்துக்கள் மட்டுமின்றி, பிற மதங்களைச் சேர்ந்தவர்களும் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர். தினமலர் நாளிதழ், வாசகர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சி பொங்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.