Home மாவட்டங்கள் சென்னை உற்பத்தி குறைவால் பட்டாசு விலை உயர்வு

உற்பத்தி குறைவால் பட்டாசு விலை உயர்வு

சிவகாசி: அக். 5-
தீபாவளி பண்டிகையையொட்டி தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி வழங்கும் பணிகள் தொடங்கியுள்ளன. இதற்கிடையே, உற்பத்தி குறைவு மற்றும் மூலப்பொருட்களின் விலையேற்றம் காரணமாக, பட்டாசு ஆலைகளில் அடக்க விலை 15 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
சிவகாசி பகுதியில் 1,100-க்கும் மேற்பட்ட அனுமதி பெற்ற பட்டாசு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. பேரியம் நைட்ரேட் பயன்படுத்தத் தடை, இணைப்பு வெடிகள் தயாரிக்கத் தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளால், தற்போது 60 சதவீத வகை பட்டாசுகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
கடந்த 2 ஆண்டுகளாக பட்டாசு உற்பத்தி குறைந்தபோதிலும், விலை உயர்வு காரணமாக தீபாவளி விற்பனை ரூ.6,000 கோடி அளவுக்கு நடைபெற்றது. தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் மட்டுமே ஆண்டு முழுவதும் செயல்படும் நிரந்தர பட்டாசுக் கடைகளுக்கான உரிமம் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள 2,500-க்கும் அதிகமான சில்லறை விற்பனைக் கடைகளில் ஆடிப் பெருக்கு அன்று பட்டாசு விற்பனை தொடங்கியது. தற்போது தமிழகம் முழுவதும் தீபாவளி விற்பனைக்கான தற்காலிக பட்டாசுக் கடைகளுக்கு அனுமதி வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதையடுத்து, வெளிமாவட்ட வியாபாரிகள் மற்றும் பெரு நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு வழங்கவும், தொழில் துறையினர் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கவும், அன்பளிப்பு பெட்டி வகை பட்டாசுகளை ஆர்டர் செய்வதற்காக சிவகாசியில் குவிந்து வருகின்றனர். ஆலைகளில் அடக்க விலை உயர்ந்துள்ளதால், சில்லறைக் கடைகளில் பட்டாசு விலை 20 முதல் 25 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கூறுகையில், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெரும்பாலான ஆலைகளில் உற்பத்தி நடைபெறவில்லை. இதனால் ஏற்கெனவே பெறப்பட்ட ஆர்டர்களை கடைகளுக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அடக்க விலை மற்றும் லாரி வாடகை உயர்வால் சில்லறை விற்பனை விலை 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. விலை உயர்ந்தபோதும், தீபாவளி நெருங்கும் நேரத்தில் மக்கள் விரும்பும் பேன்சி ரக பட்டாசுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.