Home செய்திகள் தேசிய செய்திகள் உலகளவில் அகதிகளாக 7.80 கோடி மக்கள்

உலகளவில் அகதிகளாக 7.80 கோடி மக்கள்

டெல்லி, ஜூன் 24- பஞ்சம், பட்டினி, வறட்சி, போர் அல்லது வன்முறைகள், இயற்கை சீற்றங்கள் நிகழும்போது, அதை எதிர்கொள்ள முடியாத நிலையில் சொந்த நாட்டை விட்டு இடம் பெயர்ந்து செல்லும் மக்களே அகதிகள் என்று அழைக்கப்படுகின்றனர். ஒரு மனிதன் பிறந்தநாட்டை விட்டு உரிமை துறந்து, உடைமை துறந்து, உறவுகள் துறந்து வேறு நாட்டிற்கு தஞ்சம் புகுவது வேதனையின் உச்சம். பசி, பட்டினி தாங்கமுடியாமல், உயிருக்கு பயந்து அவர்கள் வெளியேறுவது காலத்தின் கொடுமை. இந்தவகையில் உலகம் முழுவதும் 7.80கோடி பேர் அகதிகளாக இருக்கின்றனர்.
ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 20 பேர், தங்கள் நாட்டில் வசிக்க முடியாமல் அகதிகளாக வேறொரு நாட்டிற்கு தஞ்சம் அடையச் செல்கின்றனர் என்பது ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள தகவல்.
இவ்வாறு அகதிகளாக வாழும் மக்களை நினைவில் கொள்வதும், அவர்களுக்கான மேம்பாட்டு பணிகளை செய்ய வேண்டியதும் மிகவும் அவசியம். இதனை கருத்தில் கொண்டு ஆண்டு தோறும் ஜூன் 20ம்தேதி (இன்று) சர்வதேச அகதிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி உலகம் முழுவதும் அகதிகள் நலன் மற்றும் மேம்பாடு சார்ந்த அமைப்புகள் பல்வேறு பணிகளை செய்து வருகிறது. அவர்களின் நிலை மற்றும் தேவைகள் குறித்த பல்வேறு தகவல்களையும் வெளியிட்டு வருகிறது. இதுகுறித்து அகில இந்திய அகதிகள் மேம்பாடு சார்ந்த பல்வேறு கூட்டமைப்புகளின் நிர்வாகிகள் கூறியதாவது: சொந்த நாட்ைட விட்டும், இருக்கும் இருப்பிடத்தையும், சிறிய சேமிப்பையும் ஒருவர் விட்டுவிட்டு செல்கிறார் என்றால் அவர், அகதி என்று வரையறுக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்டவர்களின் கையறு நிலையை நாம் உணரவேண்டும். உயிர் பிழைத்தால் போதும் என்பதை விட, வேறுஎந்த லட்சியமும் இல்லாமல் தொடர்வதே அகதிகளின் பயணம். இந்தவகையில் இந்தியாவில் பல்வேறு காலகட்டங்களில் அகதிகள் வந்துள்ளனர். வங்கதேசம், மியான்மர், திபெத், இலங்கை என்று பல்வேறு நாடுகளில் இருந்து அகதிகளாக வந்த மக்களை ஒன்றிய, மாநில அரசுகள் பாதுகாத்து வருகின்றன.