
பெங்களூரு: ஜூன் 24- காதலனுடன் சேர்ந்து வாழ பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த மகள், தனது பெற்ற தாய், தந்தை மற்றும் உடன் பிறந்த தங்கையை கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமறைவாக இருந்த கொலையாளி மகளை பாண்டிச்சேரியில் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு கே.ஆர்.புரம் சிகேஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தர் (வயது 55). இவரது மனைவி முத்துலட்சுமி (48). இவர்களது இளைய மகள் சுப்ரியா (20). இவர்களது மூத்த மகள் ஸ்வேதா.
ஸ்வேதாவும், அவரது காதலர் கென்னத் என்பவரும் கடந்த இரண்டு மாதங்களாக டாமினிக் லேஅவுட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் ஒன்றாக வசித்து வந்தனர். இவர்களின் இந்த ‘லிவிங்-இன்’ முறைக்கு ஸ்வேதாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை மாலை மகளைச் சந்திப்பதற்காக பெற்றோர் மற்றும் தங்கை சுப்ரியா ஆகியோர் ஸ்வேதாவின் அறைக்கு வந்துள்ளனர். அப்போது அவர்களுக்கிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றவே, ஆத்திரமடைந்த ஸ்வேதாவும் அவரது காதலனும் சேர்ந்து, பெற்றோர் மற்றும் தங்கையை கத்தியால் சரமாரியாகக் குத்தினர்.
இதில் பலத்த காயமடைந்த தாய் முத்துலட்சுமியும், தங்கை சுப்ரியாவும் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்
மனைவியும், இளைய மகளும் கண்முன்னே துடிதுடித்து இறந்த நிலையிலும், படுகாயமடைந்த தந்தை சோமசுந்தர் எப்படியோ தப்பித்து அலறியபடி வீட்டை விட்டு வெளியே ஓடிவந்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டுகளில் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி சோமசுந்தரும் பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையே கொலையாளிகள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து கே.ஆர்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கொலையாளி ஸ்வேதா பாண்டிச்சேரி ரயில் நிலையத்தில் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை அதிரடியாகக் கைது செய்தனர். கைதான ஸ்வேதாவை பெங்களூருவுக்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள அவரது காதலர் கென்னத்தை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர் என்று துணை போலீஸ் கமிஷனர் சைதுலு அதாவத் தெரிவித்துள்ளார்.



















