Home செய்திகள் தேசிய செய்திகள் ஊடுருவல்காரர்களின் வாக்குகளை காக்க ராகுல் விருப்பம்: அமித் ஷா

ஊடுருவல்காரர்களின் வாக்குகளை காக்க ராகுல் விருப்பம்: அமித் ஷா

புதுடெல்லி: அக். 23-
ஊடுருவல்காரர்களின் வாக்குகளைப் பாதுகாக்க ராகுல் காந்தி விரும்புகிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்தார்.அமித் ஷா நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதையொட்டி, டெல்லியில் நடைபெற்ற விழாவில், யமுனை நதியைத் தூய்மைப்படுத்துவதற்கான ரூ.8,941 கோடி மதிப்பிலான திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். விழாவில் பேசிய அவர், காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி அரசுகள் யமுனை நதியில் கழிவுநீர் கலக்க அனுமதித்ததாக குற்றம்சாட்டினார். யமுனை நதி மே 2029-க்குள் தூய்மைப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
பாஜக தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்று வருவது எதிர்க்கட்சிகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தேர்தல் தோல்வியை மறைப்பதற்காக வாக்குத் திருட்டு நடைபெற்றதாக எதிர்க்கட்சிகள் காரணங்களை கூறி வருவதாக அமித் ஷா தெரிவித்தார்.ராகுல் காந்தி தொடர்ந்து வாக்குத் திருட்டு குறித்து பேசுவதற்குக் காரணம், ஊடுருவல்காரர்களின் வாக்குகளைப் பாதுகாக்க அவர் விரும்புவதுதான் என்றும் அமித் ஷா கூறினார். “ராகுல் ஜி, நீங்கள் தொடர்ந்து வாக்குத் திருட்டு குறித்து பேசுகிறீர்கள். ஏனெனில், ஊடுருவல்காரர்களின் வாக்குகளைப் பாதுகாக்க விரும்புகிறீர்கள்” என்று அவர் தெரிவித்தார்.
அரசியல் சூழ்ச்சி மூலமாகவோ, கூட்டத்தைக் கூட்டி அழுத்தம் கொடுப்பதன் மூலமாகவோ மக்கள் வழங்கிய தீர்ப்பை மாற்ற முடியாது என்றும் அமித் ஷா கூறினார். தேர்தல்களில் வெற்றி பெறுவதற்கு போராட்டங்களையும் தர்ணாவையும் நடத்துவது மட்டுமே போதாது என்றும் அவர் குறிப்பிட்டார்.பஞ்சாபில் போதைப்பொருள் கடத்தல் பெரும் பிரச்சினையாக உள்ளது. வரும் தேர்தலில் ஆம் ஆத்மி அரசு அகற்றப்பட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும். அதன் பின்னர் போதைப்பொருள் கடத்தல் முடிவுக்குக் கொண்டு வரப்படும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.