Home செய்திகள் தேசிய செய்திகள் ஊழியர்களுக்கு தலா ரூ.1 லட்சம் தீபாவளி போனஸ்

ஊழியர்களுக்கு தலா ரூ.1 லட்சம் தீபாவளி போனஸ்

சூரத், நவ. 8-
குஜராத்தின் சூரத் நகரில், ஊழியர்களுக்கு கட்டுக்கட்டாக தீபாவளி போனஸ் வழங்கிய தொழிலதிபரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல்வேறு வகையான துணி விற்பனைக்கு பிரசித்தி பெற்ற சூரத் நகரில் தொழில் செய்து வரும் ராம்ஸ்வரூப் முண்டே, தனது நிறுவனத்தில் பணிபுரியும் 20 ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்கியுள்ளார். ஊழியர்கள் தங்களின் குடும்பத்தினருடன் தீபாவளி பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக அவர் இந்த ஏற்பாட்டை செய்ததாக கூறப்படுகிறது. இதற்காக ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.200 மற்றும் ரூ.500 மதிப்பிலான புதிய கரன்சி நோட்டுகளை கட்டுக்கட்டாக எடுத்து, வெள்ளித் தட்டுகளில் வரிசையாக அடுக்கி வைத்திருந்தார். பின்னர், ஊழியர்கள் அனைவரையும் வரிசையாக நிற்கச் செய்தார். அவர்கள் வந்ததும், தனது மனைவியின் கைகளில் போனஸ் தொகையை வழங்கி, ஊழியர்களுக்கு வழங்கும்படி ராம்ஸ்வரூப் கூறினார். அதன்படி, 20 ஊழியர்களுக்கும் தலா ரூ.1 லட்சம் வீதம் தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது. தங்களுக்கு வழங்கப்பட்ட தொகையைப் பார்த்து சில ஊழியர்கள் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டனர். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது வைரலாகப் பரவி வருகிறது. இதுகுறித்து தொழிலதிபர் ராம்ஸ்வரூப் கூறுகையில், “நான் வறுமையில் இருந்து வளர்ந்து இந்த நிலைக்கு வந்துள்ளேன். பணம் இல்லாத நேரத்தில் பண்டிகைக் காலங்களில் குடும்பங்கள் எவ்வாறு சிரமப்படும் என்பது எனக்குத் தெரியும். என்னுடைய ஊழியர்கள் கடையில் வேலை செய்பவர்கள் மட்டுமல்ல; அவர்கள் என் குடும்பத்தின் ஒரு பகுதியாக உள்ளனர்” என்றார்.