
புதுடெல்லி, ஜூலை 30- ‘’20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்களின் இன்ஜின் சேதம் ஏற்படுவது அல்லது மைலேஜ் குறையும் என்று எந்தவொரு அறிவியல் ஆய்வாலும் உறுதிப்படுத்தப்படவில்லை’’ என பார்லிமென்டில் மத்திய அரசு தெளிவுப்படுத்தியது. இது குறித்து ராஜ்யசபாவில் மத்திய மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியதாவது: * 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலை படிப்படியாக அறிமுகப்படுத்துவதற்கு முன்பு வாகனங்களுக்கு ஏதும் பிரச்னையை ஏற்படுகிறதா என்பது விரிவான அறிவியல் ஆய்வுகள், கள சோதனைகள் மற்றும் நிபுணர் அமைப்புகளுடனான ஆலோசனைகள் நடத்தப்பட்டது. * இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட், டேராடூனில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் பெட்ரோலியம், சொசைட்டி ஆப் இந்தியன் ஆட்டோமொபைல் மேனுபேக்சரர்ஸ் மற்றும் ஆட்டோமோட்டிவ் ரிசர்ச் அசோசியேஷன் ஆப் இந்தியா ஆகியவை இணைந்து நடத்திய ஒரு ஆய்வில், 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் பைக் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. * கார்கள் அல்லது இருசக்கர வாகனங்களின் இன்ஜின்களை மாற்றியமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. பழைய வாகனங்கள் கூட, 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலில் இயக்கப்பட்டபோது, செயல்திறனில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சில பழைய வாகனங்களுக்கு மட்டுமே சிறிய பாகங்கள் மாற்றப்பட வேண்டியிருக்கலாம். * கடந்த 2005ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டு, 2016ம் ஆண்டுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட வாகனங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், சில ரப்பர் பாகங்கள் மற்றும் கேஸ்கெட்டுகளை மாற்ற வேண்டியிருக்கலாம். வழக்கமான வாகனப் பராமரிப்பின்போது இவற்றை எளிதாகச் சரிசெய்துவிடலாம். * 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோலைப் பயன்படுத்துவதால் வாகனங்களின் இன்ஜின் சேதம் ஏற்படுவது அல்லது மைலேஜ் குறையும் என்று எந்தவொரு அறிவியல் ஆய்வாலும் உறுதிப்படுத்தப் படவில்லை. * எரிபொருளால் மட்டுமல்ல வேறு பல காரணங்களால் வாகனத்தின் மைலேஜ் பாதிக்கப்படுகிறது என்று வாகன உற்பத்தியாளர்களும் தெளிவுபடுத்தியுள்ளனர். * எத்தனால் கலந்த பெட்ரோலால் வாகனங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் தெரியவந்தது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.













