
புதுடெல்லி: அக். 1-
டெல்லியில் போக்குவரத்து நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ.1,789 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ள செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அடிப்படையிலான போக்குவரத்து மேலாண்மை அமைப்பு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்குப் பின்னர் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:
டெல்லியில் போக்குவரத்து நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கில் ஏஐ அடிப்படையிலான போக்குவரத்து மேலாண்மை அமைப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நிகழ்நேர போக்குவரத்துத் தரவுகள், தேவைக்கேற்ப தானாக மாறும் சிக்னல்கள், தானியங்கி விதிமுறை அமலாக்கம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டளை-கட்டுப்பாட்டு அமைப்புகள் மூலம் டெல்லியின் தற்போதைய சாலை வலையமைப்பை மிகச் சிறப்பாக நிர்வகிக்க இந்தத் திட்டம் உதவும். இந்தத் திட்டம் 42 முக்கிய போக்குவரத்து வழித்தடங்களை உள்ளடக்கும். இரண்டு ஆண்டுகளில், மூன்று கட்டங்களாகத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். மேலும், மாநிலங்களுக்கு இடையிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பரிமாற்றத்தை வலுப்படுத்தும் பிஎம்-தாரா திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்தின் மொத்த மதிப்பு ரூ.1.86 லட்சம் கோடியாகும். மின் அமைப்பை வலுப்படுத்தும் இந்தத் திட்டம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 135 கிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மின்வலையமைப்பில் இணைத்து, அதை வெளியேற்றுவதற்கான மின்பரிமாற்ற அமைப்பை வலுப்படுத்தும். இந்தத் திட்டத்தை 2032-33-ம் நிதியாண்டுக்குள் நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.













