
நியூயார்க், செப். 26-
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் 81-வது ஐ.நா. பொதுச் சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உரையாற்றினார்.
காசாவில் ஹமாஸ் அமைப்புக்கு எதிராக நடைபெற்று வரும் போர் மற்றும் ஈரான், சிரியா, லெபனான், ஏமன் ஆகிய நாடுகளில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் ராணுவ நடவடிக்கைகளை நியாயப்படுத்தும் வகையில் அவர் பேசினார். காசா, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை, சிரியா, லெபனான், ஈரான், ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பு மற்றும் ஈராக்கில் உள்ள போராளிக் குழுக்கள் என ஏழு முனைகளில் இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருவதாக நெதன்யாகு குறிப்பிட்டார். தொடர்ந்து அவர், “நாங்கள் வெற்றி பெறப் போகிறோம். எங்களுக்கு வேறு வழியில்லை” என்று தெரிவித்தார்.
நெதன்யாகுவின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐ.நா. சபை பிரதிநிதிகள் பலர் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் நெதன்யாகுவைக் கண்டித்து கோஷமிட்டபடி சபையில் இருந்து வெளியேறினர். இதேவேளையில், சபையில் இருந்த இஸ்ரேல் ஆதரவாளர்கள் எழுந்து நின்று கைகளைத் தட்டி ஆதரவு தெரிவித்தனர். இதனால் ஐ.நா. பொதுச் சபை கூட்ட அரங்கில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.













