Home மாவட்டங்கள் பெங்களூர் மண்டூர் அருகே கூண்டில் சிக்கியது சிறுத்தை: பொதுமக்கள் நிம்மதி

மண்டூர் அருகே கூண்டில் சிக்கியது சிறுத்தை: பொதுமக்கள் நிம்மதி

மண்டியா: செப். 26-
மண்டூர் தாலுகா எச்.ஹொசஹள்ளி கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக மக்களையும் விவசாயிகளையும் அலறவிட்டு வந்த சிறுத்தை, வனத்துறை வைத்த கூண்டில் இறுதியாகச் சிக்கியது.
கடந்த ஒரு மாதமாக எச்.ஹொசஹள்ளி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் உலா வந்த இந்தச் சிறுத்தை, மக்கள் மத்தியில் கடும் பீதியை ஏற்படுத்தியிருந்தது. இதுவரை 8 ஆடுகள், 2 நாய்கள், 1 பசுங்கன்று மற்றும் 1 எருமைக்கன்றை வேட்டையாடித் தின்றுள்ளது.
சிறுத்தையின் தொடர் தாக்குதலால் பொதுமக்கள் விவசாய நிலங்களுக்குச் செல்லக்கூட அஞ்சி நடுங்கினர். உடனடியாகச் சிறுத்தையைப் பிடிக்க வேண்டும் எனப் பொதுமக்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று வனத்துறை ஊழியர்கள் கிராமத்தில் கூண்டு வைத்தனர். அந்தக் கூண்டிற்குள் நாயைக் கட்டியிருந்த நிலையில், அதை வேட்டையாட வந்த சிறுத்தை கூண்டிற்குள் சிக்கிக்கொண்டது.
சிறுத்தை பிடிபட்டதால் எச்.ஹொசஹள்ளி கிராம மக்கள் பெருமூச்சு விட்டுள்ளனர். இனி பயமின்றி நடமாடலாம் என நிம்மதியடைந்துள்ளனர். திறம்படச் செயல்பட்டு சிறுத்தையைப் பிடித்த வனத்துறை அதிகாரிகளுக்கு கிராம மக்கள் தங்களது பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.