Home மாவட்டங்கள் சென்னை ஒரு தொண்டனைக் கூட வாங்க முடியாது: தவெக பதிலடி

ஒரு தொண்டனைக் கூட வாங்க முடியாது: தவெக பதிலடி

சென்னை, நவ. 19–-
தவெக எம்.எல்.ஏ.க்கள் 70 பேர் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த உள்ளதாகவும் கூறிய முன்னாள் அமைச்சர் ரகுபதிக்கு, அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் சவுந்தரராஜா பதிலடி அளித்துள்ளார். தவெக ஆட்சி கவிழ்ந்த பிறகு நடைபெறும் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் ரகுபதி தெரிவித்திருந்தார். இதற்கு பதில் அளித்து சவுந்தரராஜா வெளியிட்ட கருத்தில் கூறியிருப்பதாவது: தவெக எம்.எல்.ஏ.க்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறி மக்களைத் திசைதிருப்பும் வேலையில் திமுக இறங்கியுள்ளது. குதிரை பேரம் நடத்துவதும், எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதும் திமுகவுக்குக் கைவந்த கலை. அதிமுகவில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி, ஓ.பன்னீர்செல்வம், சேகர்பாபு போன்ற ஊழல்வாதிகளை இணைத்துக்கொண்டு அரசியல் செய்வது யார்? உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற மதிமுக எம்.எல்.ஏ.வை மிரட்டி திமுகவில் இணைய வைத்தது யார்? தவெக எம்.எல்.ஏ.க்கள் யாரும் அதிருப்தியில் இல்லை. ஒரு தொண்டனைக் கூட விலைக்கு வாங்க முடியாது. ஆட்சி மாற்றம் வரும், அடுத்து நாம்தான் என நினைத்துக்கொண்டிருக்கும் உங்களின் பகல் கனவு பலிக்காது. மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தவெக எம்.எல்.ஏ.க்கள் குறித்து பொய்யான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. திமுகவின் இந்த முயற்சிக்கு மக்கள் ஏமாறமாட்டார்கள். தவெகவைச் சேர்ந்த எந்த எம்.எல்.ஏ.வும் விலைக்கு வாங்கப்பட முடியாது. இவ்வாறு சவுந்தரராஜா தெரிவித்துள்ளார்.