
சென்னை, நவ. 19–-
2026-27ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில், கிராமப்புற மேம்பாடு, ஊட்டச்சத்து பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் முக்கியத் துறையாக கால்நடை பராமரிப்புத் துறை குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் கீழ், ஊரகப் பகுதிகளில் வசிக்கும் நலிவடைந்த கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ‘வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், 100 சதவீத மானியத்தில் தகுதியான பயனாளிகளுக்கு ஐந்து வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும். இதன்மூலம் சுமார் 30,000 பேர் பயன்பெறுவர் என்று நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் மரிய வில்சன் அறிவித்திருந்தார்.அந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், 2026-27ஆம் நிதியாண்டில் 30,000 தகுதியான நபர்களுக்கு ஆடுகள் வழங்குவதற்காக ரூ.109.75 கோடிக்கு நிர்வாக மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டுள்ளது. இந்த நிலையில், வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்புத் திட்டம் மற்றும் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம் என அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆதார் எண்ணுக்கு விண்ணப்பித்தும் இதுவரை எண் ஒதுக்கப்படாதவர்கள், அதற்கான பதிவு ரசீதுடன் வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட் அல்லது ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட மாற்று அடையாள ஆவணங்களைச் சமர்ப்பித்து பயன்பெறலாம்.ஆதார் எண் கிடைக்கும் வரை இந்த ஆவணங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் அங்கீகாரத்தில் சிக்கல் ஏற்பட்டால், ஒருமுறை கடவுச்சொல் (ஓடிபி), மாற்று பயோமெட்ரிக் முறை அல்லது கியூஆர் கோடு மூலம் அடையாளத்தைச் சரிபார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.














