Home மாவட்டங்கள் சென்னை விஜயபாஸ்கரிடம் 9 மணி நேரம் விசாரணை

விஜயபாஸ்கரிடம் 9 மணி நேரம் விசாரணை

சென்னை, நவ. 19–-
கடந்த 2016 முதல் 2021-ம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில் சுகாதாரத் துறை அமைச்சராகப் பதவி வகித்த சி.விஜயபாஸ்கர், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை 2021-ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இதில், சுமார் ரூ.35.79 கோடி மதிப்பிலான சொத்துகள் வருமானத்துக்கு அதிகமாகச் சேர்க்கப்பட்டதாகக் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2024-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர். இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யாவுக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. நவம்பர் 6-ம் தேதி ஆஜராகுமாறு முதலில் உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், இருவரும் விசாரணைக்கு வரவில்லை. இதையடுத்து, நவம்பர் 18-ம் தேதி விஜயபாஸ்கரும், நவம்பர் 19-ம் தேதி அவரது மனைவி ரம்யாவும் ஆஜராக வேண்டும் என அமலாக்கத் துறை மீண்டும் சம்மன் அனுப்பியது. அதன்படி, நேற்று காலை 9 மணியளவில் நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் ஆஜரானார். அவரிடம், வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாகக் கூறப்படும் புகார், சொத்துகளை வாங்குவதற்கான நிதி ஆதாரங்கள், வங்கிப் பரிவர்த்தனைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் தொடர்பான நிதி விவரங்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் 9 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்த பின்னர், மாலை 6.30 மணி அளவில் அமலாக்கத் துறை அலுவலகத்திலிருந்து வெளியே வந்த விஜயபாஸ்கர், காரில் புறப்பட்டுச் சென்றார். அவரது மனைவி ரம்யா இன்று அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.