
பெங்களூரு: நவ. 19-
விமானத்தில் இருந்து பார்க்கும்போது, பசுமையான வயல்வெளிகளுக்கு நடுவே நேர்கோட்டில் நீளும் சென்னை–பெங்களூரு அதிவிரைவுச் சாலை பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்தச் சாலையின் விமானக் காட்சிகளும், ட்ரோன் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளன. பாலங்கள், வளைந்த சந்திப்புகள், பசுமையான சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு இடையே சாலை அழகாகக் காட்சியளிக்கிறது.
சுமார் ரூ.18,000 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இந்த நான்கு வழிப் பசுமைச் சாலை முழுமையாகப் பயன்பாட்டுக்கு வந்தால், தற்போது 5 முதல் 7 மணி நேரம் வரை ஆகும் சென்னை–பெங்களூரு சாலைப் பயணம் 2.5 முதல் 3 மணி நேரமாகக் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு அதிகபட்சம் 120 கிலோமீட்டர் வேகத்தில் கார்கள் செல்லும் வகையில் சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், டிராக்டர்கள் ஆகியவற்றுக்கு
இதில் அனுமதி இல்லை. சுமார் 262 கிலோமீட்டர் நீளமுள்ள இந்தச் சாலை, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்களை இணைக்கிறது. கர்நாடகத்தில் ஹோஸ்கோட்டையில் தொடங்கி மாலூர், பங்காரப்பேட்டை வழியாக பெத்தமங்கலா செல்கிறது. ஆந்திரப் பிரதேசத்தில் பைரெட்டிபள்ளி, பங்காருபாலம், குடிபாலா பகுதிகள் வழியாகச் செல்கிறது. தமிழ்நாட்டில் வாலாஜாப்பேட்டை, அரக்கோணம், காஞ்சிபுரம் வழியாக ஸ்ரீபெரும்புதூரில் இணைகிறது.
















