
உஜ்ஜைன், நவ. 1- மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில் ஓட்டல் அறையை சுத்தம் செய்யச் சென்ற 4 ஊழியர்கள் அறைக்குள் சிக்கி உயிரிழந்தனர். அவர்களை மீட்க உள்ளே சென்ற மேலும் 2 பேரும் பாதிக்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்ட உதவி காவல் ஆய்வாளர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. உஜ்ஜைன்–திவாஸ் சாலையில் ‘ஸ்ரீகங்கா’ என்ற பெயரில் ஓட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டலின் கீழ்தளத்தில் உள்ள ஓர் அறையில் தூய்மைப் பணியை மேற்கொள்வதற்காக ஊழியர்கள் இரவு நேரத்தில் சென்றுள்ளனர். முதலில் 2 ஊழியர்கள் அறைக்குள் சென்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், அவர்கள் அறைக்குள் சிக்கிக்கொண்டு வெளியே வரவில்லை. இதையடுத்து, அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்து கொள்வதற்காக மேலும் 2 ஊழியர்கள் அறைக்குள் சென்றனர். அவர்களும் அறைக்குள் சிக்கி வெளியேற முடியாமல் தவித்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் கிடைத்ததும் மாதவ் நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். அறையின் கதவைத் திறக்க முடியாததால், கட்டர் இயந்திரம் மூலம் கதவை அறுத்தனர். ஏறக்குறைய ஒன்றரை மணி நேர முயற்சிக்குப் பிறகு, அறைக்குள் சிக்கியிருந்த 4 பேரையும் போலீசார் வெளியே கொண்டு வந்தனர். எனினும், அவர்கள் அனைவரும் உயிரிழந்திருந்தனர். அந்த 4 பேரையும் காப்பாற்றுவதற்காக மற்றொரு ஊழியர் அறைக்குள் சென்றபோது அவருக்கு மயக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக அறையிலிருந்து வெளியே வந்தார். இதன்பின்னர், 4 பேரை மீட்க உள்ளே சென்ற மேலும் 2 பேரும் பாதிக்கப்பட்டனர். மீட்புப் பணியின்போது காயமடைந்த உதவி காவல் ஆய்வாளர் உள்பட அனைவரும் மீட்கப்பட்டு, உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.













