
சென்னை, நவ. 1- பெண்கள், குழந்தைகள் பாதுகாப்புக்காக 26 புதிய சிறப்பு நீதிமன்றங்களும், போதைப்பொருள் வழக்குகளை விசாரிக்க 4 புதிய சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டார். தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கும், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காலத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கும் தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தமிழகம் முழுவதும் நிலுவையில் உள்ள போக்சோ வழக்குகளின் நிலை குறித்து நடந்த ஆய்வுக் கூட்டத்தில், போக்சோ வழக்குகளின் விவரம், தற்போதைய நிலை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்கென கூடுதலாக தேவைப்படும் நீதிமன்றங்கள் ஆகியவை குறித்து முதல்வர் விஜய் விரிவாக கேட்டறிந்தார்.46.59 கோடி ரூபாயில்…
இவ்வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்தி, குற்றம் நிரூபிக்கப்படும் நபர்களுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தருவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும், அனைத்து மாவட்டங்களிலும் போக்சோ நீதிமன்றங்களை அமைப்பதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதல்வர் விஜய் உத்தரவிட்டார். ஏற்கெனவே பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், 2012-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக, 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் ரூபாய் 46.59 கோடி செலவில் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
4 புதிய சிறப்பு நீதிமன்றங்கள்
போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் இலக்குடன், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வேலூர் ஆகிய 3 இடங்களில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றமும், சென்னையில் ஒரு கூடுதல் சிறப்பு நீதிமன்றமும் என மொத்தம் 4 புதிய சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கப்பட உள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிப்பதற்கும், நீதித்துறை நடைமுறைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் அரசின் இலக்கை நோக்கி தொடர்ந்து செயல்படுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.














