
திருவொற்றியூர், செப். 16- திருவொற்றியூரில் விநாயகர் சிலையை கடலில் கரைக்கச் சென்ற வாலிபர் கடலில் மூழ்கி உயிரிழந்தார். திருவொற்றியூர் சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 35). இவர், திருவொற்றியூரில் உள்ள ஒரு தனியார் டயர் தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வந்தார். மனைவி காமாட்சி. நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கமலக்கண்ணன் தனது வீட்டில் சிறிய விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்தார். பின்னர் மாலையில் தனது மோட்டார் சைக்கிளில் அந்த விநாயகர் சிலையை எடுத்துக்கொண்டு எண்ணூர் பாரதியார் நகர் அருகே கடலில் கரைத்துவிட்டு வருவதாகக் கூறிச் சென்றார். ஆனால், வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி காமாட்சி, கமலக்கண்ணனின் செல்போனுக்கு தொடர்புகொண்டார். ஆனால் அவர் அழைப்பை எடுக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த காமாட்சி, பாரதியார் நகர் கடற்கரைக்குச் சென்று பார்த்தார். அங்கு கமலக்கண்ணன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் நின்றுகொண்டிருந்தது. அதில் அவரது செல்போன் இருந்தது.இதுகுறித்து காமாட்சி எண்ணூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடலில் இறங்கி தேடுதல் நடத்தினர். ஆனால் கமலக்கண்ணனை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து கமலக்கண்ணனின் உறவினர்கள், அவரது உடலை மீட்டுத்தரக்கோரி திருவொற்றியூர் எம்.எல்.ஏ. செந்தில்குமாரிடம் கோரிக்கை விடுத்தனர்.















