Home மாவட்டங்கள் பெங்களூர் கட்டுமான நிறுவனம் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

கட்டுமான நிறுவனம் மீதான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

பெங்களூர்: செப். 23-
கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம் அருகே ‘ஓஸோன் அர்பானா’ எனும் மிகப்பெரிய குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்துவதாக கூறி, வாடிக்கையாளர்களிடம் பல கோடி ரூபாய் முன்பணம் பெற்று மோசடி செய்ததாக புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் ‘ஓஸோன் அர்பானா இன்ஃப்ரா டெவலப்பர்ஸ்’ கட்டுமான நிறுவனத்தின் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து, ரூ.423.38 கோடி மதிப்பிலான சொத்துக்களையும் பறிமுதல் செய்தது.
இந்நிலையில், அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கையும், சொத்துக்கள் பறிமுதல் நடவடிக்கையையும் ரத்து செய்யக்கோரி அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் வாசுதேவன் சத்தியமூர்த்தி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.நாகபிரசன்னா, மக்கள் தங்களது வாழ்நாள் சேமிப்பை வீடு வாங்க முதலீடு செய்வதால், அந்தப் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்துவது நாட்டின் பொருளாதார அமைப்பின் மீதான நம்பிக்கையைச் சீர்குலைக்கும் என்றும், விசாரணை ஆரம்பக் கட்டத்தில் இருப்பதால் வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தார்.
முன்னதாக 2015-16-ஆம் ஆண்டிற்குள்ளேயே வீடுகளை ஒப்படைக்காமல் ஏமாற்றியதால் 180-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அளித்த புகாரின் பேரிலேயே, நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் எச்டிஎஃப்சி வங்கி அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அமலாக்கத்துறை விசாரணையை தீவிரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில், கர்நாடக நிதி நிறுவன முதலீட்டாளர்கள் நல பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கைகளை மட்டும் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.