
சென்னை, அக். 25-
பிரபல சமையல் கலைஞர் செப் தாமு உடல்நலக் குறைவால் காலமானார். கடந்த ஒரு வாரமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று (அக். 25) காலை அவர் உயிரிழந்தார். தாமோதரன் என்பது செப் தாமுவின் இயற்பெயராகும். சமையல் கலையில் சிறந்து விளங்கிய அவர், இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு நட்சத்திர ஓட்டல்களில் பணியாற்றியுள்ளார். உலகின் பல்வேறு வகையான உணவுகளையும் சமைப்பதில் திறமை பெற்றிருந்தார்.கடந்த 2010-ம் ஆண்டில் தொடர்ந்து 24 மணி நேரம் 30 நிமிடங்கள் 12 வினாடிகளில் 617 வகையான உணவுகளை சமைத்து கின்னஸ் உலக சாதனை படைத்தார். இந்த சாதனை மூலம் சமையல் துறையில் அவர் சர்வதேச அளவில் கவனம் பெற்றார்.சென்னைப் பல்கலைக்கழகம் 2004-ம் ஆண்டு வழங்கிய உணவக மேலாண்மை மற்றும் சமையல் கலைத் தொழில்நுட்பப் பிரிவில் முனைவர் பட்டம் பெற்ற முதல் இந்தியச் சமையல்காரர் என்ற பெருமையையும் செப் தாமு பெற்றிருந்தார். சமையல் கலையில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி, மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது. சமையல் துறைக்கு அப்பாற்பட்டு, பல்வேறு சமையல் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் அவர் பங்கேற்றுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியை கலகலப்பாக வழங்கியதுடன், அதன் முதன்மை நடுவராகவும் திகழ்ந்தார்.
இதன் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். ‘கள்ளப்படம்’, ‘ஒரு பக்க கதை’ உள்ளிட்ட சில திரைப்படங்களிலும், ஒரு வெப்தொடரிலும் நடித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் செப் தாமுவின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.














