
கிருஷ்ணகிரி, செப். 23-
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சுரேஷ்பாபு (55), ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவர் தினமும் தனது வாகனத்தில் ஓசூருக்குச் சென்று திரும்பி வருகிறார். இதனால், கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி எல்லைக்கு உட்பட்ட சாலைகளின் பராமரிப்பு தொடர்பான விவரங்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்றார். அதன் அடிப்படையில், சாலைகள் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்று கூறி கடந்த ஜனவரி மாதம் கிருஷ்ணகிரி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் சுரேஷ்பாபு புகார் செய்தார். மாவட்ட நுகர்வோர் கோர்ட்டு நீதிபதி ராஜா தலைமையிலான அமர்வு இந்தப் புகாரை விசாரித்து வந்தது. நீதிமன்றம் நியமித்த வக்கீல் கமிஷனர் பிரியா, கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி எல்லைக்கு உட்பட்ட சாலைகள் மற்றும் பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை சார்பில், முன்பு இருந்த ஒப்பந்ததாரருடன் வழக்கு நிலுவையில் இருந்ததால் சாலைப் பராமரிப்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நுகர்வோர் கோர்ட்டு, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும் அதன் பராமரிப்பு ஒப்பந்த நிறுவனமும் இணைந்தோ அல்லது தனித்தனியாகவோ, பாதிக்கப்பட்ட புகார்தாரருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடும், ரூ.15 ஆயிரம் வழக்கு செலவும் வழங்க உத்தரவிட்டது.










