
வடோதரா: செப்டம்பர் 9-
குஜராத்தின் வடோதராவில் ரூ.35,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் மேற்கு சிறப்பு சரக்கு ரயில் போக்குவரத்து வழித்தடத் திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், பல ஆண்டுகளாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டிருந்தது. 2014-ம் ஆண்டில் பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு மேற்கு சிறப்பு சரக்கு ரயில் போக்குவரத்து வழித்தடத் திட்டப் பணிகளை விரைவுபடுத்தினார்.இந்தத் திட்டத்தின் கீழ் டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிராவை இணைக்கும் வகையில் சரக்கு ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சனந்த் (வடக்கு) – மக்கர்புரா, நியூ அம்பர்கான்- நியூ சஃபாலே, சஃபேல் – ஜேஎன்பிடி ஆகிய பகுதிகளை இணைக்கும் சரக்கு ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.குஜராத்தின் வடோதராவில் நடைபெற்ற நலத்திட்ட விழாவில் பிரதமர் மோடி புதிய சரக்கு ரயில் வழித்தடங்களைத் தொடங்கி வைத்தார்.
மொத்தம் 326 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் ரயில், சாலை வசதி தொடர்பான பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.விழாவில் பேசிய பிரதமர் மோடி, 2004-ம் ஆண்டு மேற்கு சிறப்பு சரக்கு ரயில் போக்குவரத்து வழித்தடத் திட்டம் வரையறுக்கப்பட்டது. 2006-ம் ஆண்டில் சிறப்பு நிறுவனம் தொடங்கப்பட்டது. ஆனால் 2014-ம் ஆண்டு வரை சரக்கு ரயில் வழித்தடத் திட்டம் கோப்புக்களில் மட்டுமே இருந்தது.
மத்தியில் பாஜக அரசு பதவியேற்ற பிறகு திட்டப் பணிகள் வேகம் பெற்றன. தற்போது 2,800 கி.மீ. தொலைவுக்கு சரக்கு ரயில் வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதன் மூலம் கிழக்கு, வடக்கு இந்தியாவைச் சேர்ந்த விவசாயிகள் பலன் அடைந்து வருகின்றனர்.
தற்போது கிழக்கு, மேற்கு சரக்கு வழித்தடங்களில் 430 சரக்கு ரயில்கள் இயக்கப்படுகின்றன. முந்தைய ஆட்சிக் காலத்தில் ஒரு சரக்கு ரயில் 100 கி.மீ. தொலைவைக் கடக்க ஆறரை மணி நேரம் தேவைப்பட்டது. தற்போது ஒரு சரக்கு ரயில் 3.15 மணி நேரத்தில் 100 கி.மீ. தொலைவை கடக்கிறது.
மும்பை-வடோதரா வழித்தடத்தில் இரட்டை அடுக்கு வசதி கொண்ட சரக்கு ரயில் இயங்குகிறது. இந்த தடத்தில் செல்லும் சரக்கு ரயிலில் ஒரே நேரத்தில் 250 லாரிகளை சுமந்து செல்ல முடியும்.இந்த அபார வளர்ச்சியைப் பார்த்து சில “அங்கிள்களுக்கு” கோபம் எழுகிறது. ரயில்களில் சரக்குகளை எடுத்துச் சென்றால் லாரி ஓட்டுநர்களின் நிலை என்னவாகும் என்று அவர்கள் கேள்வி எழுப்பக்கூடும். சிலர் பொய்களை மட்டுமே பரப்பி வருகின்றனர். அவர்களின் மாய வலைகளில் இளைஞர்கள் சிக்க மாட்டார்கள். பொய்மையை, வாய்மை தோற்கடிக்கும். இந்திய இளைஞர்கள் நமது நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்வார்கள்.2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா உருவாக கடந்த 2014 முதல் இதுவரை 50,000-க்கும் மேற்பட்ட அதிநவீன ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ரயில் பெட்டிகள், மெட்ரோ ரயில் பெட்டிகள், ரயில் இன்ஜின்களின் உற்பத்தி மையமாக இந்தியா உருவெடுத்திருக்கிறது.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்திய இளைஞர்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். இந்த துறையில் சர்வதேச அளவில் இந்தியா கோலோச்ச வேண்டும்.வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை எட்ட இந்தியர்கள் அனைவரும் அயராது உழைக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.















