Home மாவட்டங்கள் பெங்களூர் குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைவு:சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

குற்றால அருவிகளில் நீர்வரத்து குறைவு:சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

தென்காசி: செப்டம்பர் 5-தென்காசி மாவட்டத்தில் மழை இல்லாததால், குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து மிகக் குறைந்துள்ளது. இதனால், விடுமுறை நாளான நேற்று சுற்றுலாப் பயணிகள் கூட்டம் மிதமாகவே இருந்தது. ஜூன் முதல் செப்டம்பர் வரை தென்மேற்கு பருவமழை காலமாகும். இக்காலத்தில் சாரல் மழை பொழியும் பகுதிகளில் நீர்ப்பிடிப்பு பகுதிகள் நீர்வரத்து பெறுகின்றன.
ஆனால், இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால், கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார், குண்டாறு அணைகள் முழு கொள்ளளவை எட்டவில்லை. மலைப் பகுதியில் அவ்வப்போது பெய்த மழையால் சில நாட்கள் குற்றாலம் அருவிகள் ஆர்ப்பரித்து கொட்டின. ஆனால், மழை நீடிக்காமல் வறண்ட வானிலை நிலவியது.
கடந்த ஒரு வாரமாக பகலில் வெயிலின் தாகம் அதிகரித்துள்ளது. சாரல் இல்லாததால், குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து குறைந்துள்ளது. இதனால், ஐந்தருவி, பிரதான அருவி, சிற்றருவி, புலியருவி, பழைய குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து குறைவாக இருந்து, சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
வெயில் அதிகரித்துள்ள நிலையில், அருவிகளில் குறைவாக நீர் விழுந்தாலும், குளிர்ந்த நீரில் சுற்றுலாப் பயணிகள் குளித்துச் சென்றனர்.