Home மாவட்டங்கள் சென்னை கொளத்தூர் இடைத்தேர்தல்: ஸ்டாலின் போட்டி குறித்து ஆலோசனை

கொளத்தூர் இடைத்தேர்தல்: ஸ்டாலின் போட்டி குறித்து ஆலோசனை

சென்னை, நவ. 22-
தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மறைவால் காலியாகியுள்ள கொளத்தூர் தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீண்டும் போட்டியிடுவது குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று தீவிர ஆலோசனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம், கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர். இதில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் மட்டும் சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் தவெக வெற்றி பெற்றது.
திருச்சி கிழக்கு உள்ளிட்ட மற்ற தொகுதிகளுக்கும் விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நலக் குறைவால் காலமானதைத் தொடர்ந்து, அத்தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக எத்தகைய முடிவை எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் அதிகரித்துள்ளது. கடந்த தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோல்வியடைந்ததை தவெகவினர் கடுமையாக விமர்சித்ததே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில், ‘அப்பாவைக் காணோம்’ என்று குறிப்பிட்டதும், ‘கொளத்தூரில் உங்கள் தலைவருக்குக் கொத்துப் புரோட்டா போட்டுவிட்டோம்’ என்று தவெகவினர் விமர்சித்ததும் திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் துரைமுருகன், ஆ.ராசா, க.பொன்முடி, எ.வ.வேலு, ராஜ கண்ணப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன. மதுராந்தகம், தாராபுரத்தில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்ததாகவும், தற்போது தவெக அரசு மீது மக்களிடையே அதிருப்தி நிலவுவதால் இடைத்தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என்றும் அவர்கள் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டது.