
இஸ்லாமாபாத்: ஆக. 9-
பாகிஸ்தான் முழுவதும் கோதுமைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது.
கடந்த மார்ச் மாதம் பாகிஸ்தானில் 20 கிலோ கோதுமை மாவு பாக்கெட் ரூ.1,800-க்கு (இந்திய ரூபாயில் 616.71) விற்பனை செய்யப்பட்டது. தற்போது இதே அளவு கோதுமை மாவு ரூ.3,200-க்கு (இந்திய ரூபாயில் 1,096.38) விற்பனை செய்யப்படுகிறது.சமையல் எண்ணெய், மளிகை பொருட்களும் கணிசமாக விலை உயர்ந்துள்ளன. ஒரு வாரத்தில் மட்டும் உணவு பொருட்களின் விலை 10% வரை உயர்ந்திருக்கிறது.
இதேபோல பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் விலையும் கணிசமாக உயர்ந்து உள்ளது. அங்கு ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.459-க்கும் (இந்திய ரூபாயில் 157.26), ஒரு லிட்டர் டீசல் ரூ.520-க்கும் (இந்திய ரூபாயில் 178.16) விற்பனை செய்யப்படுகிறது.
இந்த சூழலில் கோதுமை மாவு, பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து ஜமாத் இ இஸ்லாமி கட்சி சார்பில் பாகிஸ்தான் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனிடையே, உள்நாட்டுப் போர், விலைவாசி உயர்வு காரணமாக பாகிஸ்தான் பல்வேறு பகுதிகளாக உடையும் அபாயம் இருக்கிறது என்று சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.













