Home செய்திகள் தேசிய செய்திகள் கோயில்களில் விலங்குகளை பலியிட தடை கோரும் மனு தள்ளுபடி

கோயில்களில் விலங்குகளை பலியிட தடை கோரும் மனு தள்ளுபடி

புதுடெல்லி: நவ. 19-
கோயில்கள் மற்றும் மதச் சடங்குகளின்போது விலங்குகளைப் பலியிடத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.வழக்கறிஞர் ஸ்ருதி பிஸ்ட் தாக்கல் செய்த மனுவில், மதச் சடங்குகளுக்காக விலங்குகளைக் கொல்வதற்கு விலங்குகள் வதை தடுப்புச் சட்டம், 1960-ன் பிரிவு 28 வழங்கியுள்ள விதிவிலக்கை நீக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.
மேலும், மதத்தின் பெயரால் விலங்குகள் பலியிடப்படுவதைத் தடுக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.விலங்குகளுக்கும் வாழ்வதற்கான உரிமை இருப்பதால், அவற்றைப் பலியிடுவது அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21-க்கு எதிரானது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், ஆர். மகாதேவன்,
அபரேஷ் குமார் சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. கடந்த மார்ச் மாதம், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சகத்திடம் அமர்வு விளக்கம் கோரியிருந்தது.
இந்நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மனுவைத் தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.