Home மாவட்டங்கள் சென்னை கோயில் நிலம் மீட்க குழு அமைப்பு

கோயில் நிலம் மீட்க குழு அமைப்பு

சென்னை: நவ. 5-
நுங்கம்பாக்கம் அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், நிலங்களை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க அதிகாரிகள் குழுவை அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ராம் என்பவர் தாக்கல் செய்த மனுவில், நுங்கம்பாக்கம் பகுதியில் அகத்தீஸ்வரர் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமாக 377 கிரவுண்ட் நிலம் இருந்ததாகத் தெரிவித்துள்ளார். அதில், 123 கிரவுண்ட் நிலம் 126 பேருக்கு நகர வாடகைதாரர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 34 கிரவுண்ட் நிலத்தை அறநிலையத் துறை பலருக்கு நேரடியாக முறைகேடாக விற்பனை செய்துள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
கோயிலுக்குச் சொந்தமான நிலம் தனிநபர்களுக்குத் தாரை வார்க்கப்பட்டுள்ளதாகவும், எனவே அந்த நிலங்களை மீட்டு கோயிலிடம் ஒப்படைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுதாரர் கோரியிருந்தார்.
இந்த மனு, நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், இ. மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அறநிலையத் துறை சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.வி. பாலசுப்பிரமணியம் மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆர். பரணிதரன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்க உத்தரவிட்டனர். அந்தக் குழுவில் வட்டாட்சியர், நில அளவைத் துறை இயக்குநர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் இடம்பெறுவர் எனத் தெரிவித்தனர்.கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அந்தக் குழு கண்டறிந்து, 6 வாரங்களுக்குள் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.