Home மாவட்டங்கள் சென்னை திருமணத்துக்கு தங்க நாணயம், பட்டுப்புடவை: டெண்டர்

திருமணத்துக்கு தங்க நாணயம், பட்டுப்புடவை: டெண்டர்

சென்னை: நவ. 5-
தமிழகத்தில் பெண்களின் திருமண நாளில், தமிழக அரசு சார்பில் 8 கிராம் தங்க நாணயமும், ஒரு பட்டுப்புடவையும் ‘அண்ணன் சீர்’ ஆக வழங்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தது. இத்திட்டத்தைச் செயல்படுத்த ரூ.812 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.இதையடுத்து, 8 கிராம் தங்க நாணயங்கள் மற்றும் பட்டுப்புடவைகள் தலா 60 ஆயிரம் எண்ணிக்கையில் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் அறிவிப்பை சமூகநலத் துறை வெளியிட்டுள்ளது.அறிவிப்பின்படி, பிஐஎஸ் ஹால்மார்க் முத்திரையுடன் கூடிய 22 காரட் (916) தரம் கொண்ட 8 கிராம் தங்க நாணயங்கள் வழங்கப்பட வேண்டும். 22 மில்லிமீட்டர் விட்டம் கொண்ட அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் தமிழில் அரசு இலச்சினை பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கான வைப்புத்தொகை ரூ.6 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெண்டரில் பங்கேற்கும் நிறுவனங்கள், கடந்த 3 நிதியாண்டுகளின் சராசரி ஆண்டு வருவாயாக குறைந்தது ரூ.750 கோடி பெற்றிருக்க வேண்டும். தங்கத்தின் விலை, கொள்முதல் ஆணை பிறப்பிக்கப்படும் நாளின் காலை விலையின் அடிப்படையில் கணக்கிடப்படும். செய்கூலி உள்ளிட்ட கட்டணங்களுடன் ஜிஎஸ்டியும் சேர்க்கப்படும். தங்க நாணயங்களை 30 நாட்களுக்குள் விநியோகிக்க வேண்டும். விண்ணப்பங்களை டிசம்பர் 4-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
பட்டுப்புடவைகள் சில்க் மார்க் மற்றும் கைத்தறி முத்திரை பெற்ற, 100 சதவீதம் தூய மல்பெரி பட்டால் தயாரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும். புடவை 5.50 மீட்டர், ரவிக்கைத்துணி 0.70 மீட்டர் என மொத்தம் 6.20 மீட்டர் நீளமும், 430 கிராம் எடையும் கொண்டிருக்க வேண்டும். இதில் பட்டு 380 கிராமும், ஜரிகை 50 கிராமும் இருக்க வேண்டும்.இதற்கான வைப்புத்தொகை ரூ.24 லட்சம். கடந்த 3 நிதியாண்டுகளின் சராசரி ஆண்டு வருவாய் குறைந்தது ரூ.30 கோடியாக இருக்க வேண்டும். புடவைகளை 120 நாட்களுக்குள் விநியோகிக்க வேண்டும். விண்ணப்பங்களை டிசம்பர் 7-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணக் கட்டணம் ரூ.5,725 என அறிவிக்கப்பட்டுள்ளது