
புதுடெல்லி, அக். 29- உத்தர பிரதேசம், பிஹார், மகாராஷ்டிரா, கர்நாடகம் ஆகிய 4 மாநில சட்ட மேலவைகளில் காலியாக இருந்த 28 உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. 28 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ம் தேதி நடைபெற்றது. பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதுவரை வெளியான முடிவுகளின்படி பாஜக 10-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றியுள்ளது. காங்கிரஸுக்கு ஒரு இடம்கூட கிடைக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடகத்திலும் அக்கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. அங்கு 4 தொகுதிகளில் பாஜக 3 இடங்களிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஓரிடத்திலும் வெற்றி பெற்றன.














