
மாட்ரிட்: அக். 29-
ஸ்பெயினில் இரண்டு அதிவேக பயணிகள் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய பயங்கர விபத்தில் 68-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 179-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஸ்பெயினின் மத்தியப் பகுதியில் உள்ள டொலிடோ மாகாணத்தில், உர்டா மற்றும் லாஸ் யெபனஸ் பகுதிகளுக்கு இடையே இந்த விபத்து நிகழ்ந்தது. ரென்ஃபே மற்றும் இரியோ ஆகிய தனித்தனி அரசு மற்றும் தனியார் நிறுவனங்களால் இயக்கப்படும் இரு அதிவேக ரயில்களும் ஒரே பாதையில் ஒரே திசையில் சென்றுகொண்டிருந்தன.
அப்போது, பின்னால் வந்த ரென்ஃபே ரயில், முன்னால் சிக்னலுக்காக நிறுத்தப்பட்டிருந்த இரியோ ரயிலின் பின்பகுதியில் அதிவேகமாக மோதியது. இந்த மோதலில் இரு ரயில் பெட்டிகள் தடம் புரண்டு பள்ளத்தில் சரிந்தன. விபத்து நடந்தபோது ரென்ஃபே ரயிலில் 397 பயணிகளும், இரியோ ரயிலில் 147 பயணிகளும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிக்னல் அமைப்பில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் உரிய எச்சரிக்கை விடுக்கத் தவறியதே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், இந்தச் சம்பவம் மனிதத் தவறால் ஏற்பட்டதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. விபத்தைத் தொடர்ந்து, நகரங்களுக்கு இடையேயான அதிவேக ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “டொலிடோ மாகாணத்தில் நடந்த ரயில் விபத்து அதிர்ச்சியளிக்கிறது. இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.













