Home செய்திகள் உலக செய்திகள் பாகிஸ்தான் ராணுவ தளம் மீது தாக்குதல்

பாகிஸ்தான் ராணுவ தளம் மீது தாக்குதல்

பக்திகா: அக். 29-
ஆப்கானிஸ்தானின் எல்லை மாகாணமான பக்திகாவில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் நடத்தியதாகக் கூறப்படும் 4 டிரோன் தாக்குதல்களில் 4 பேர் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதல்கள் நேற்று முன்தினம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.
இதற்குப் பதிலடியாக, பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பாகிஸ்தான் ராணுவத் தளம் மற்றும் பல நிலைகள் மீது ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தியதாக, ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசு அறிவித்துள்ளது. எனினும், எந்த ராணுவத் தளம் தாக்கப்பட்டது என்ற தகவலை அது வெளியிடவில்லை.
இந்தப் பதில் தாக்குதலில் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் தரப்பில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், பாகிஸ்தான் ராணுவ உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தத் தாக்குதல் குறித்து பாகிஸ்தான் ராணுவம் இதுவரை உறுதிப்படுத்தவில்லை. கடந்த காலங்களிலும் தங்கள் மீதான பல்வேறு தாக்குதல்களை பாகிஸ்தான் ராணுவம் உறுதிப்படுத்தவில்லை எனக் கூறப்படுகிறது. பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் தாலிபான் ஆட்சியாளர்கள் இடையே அடிக்கடி மோதல்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, இரு நாடுகளின் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த ஆண்டின் நடுப்பகுதியில் இரு தரப்புக்கும் இடையிலான மோதல் சிறிய அளவிலான போராக வெடித்தது. மத்திய கிழக்கு நாடுகளின் தலையீட்டுக்குப் பிறகு அந்த மோதல் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, தனது ராணுவத்தை மேம்படுத்தும் நோக்கில் பாகிஸ்தான் 2 பாதுகாப்பு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. அவை மெக்கா ஒப்பந்தம், பத்ர் ஒப்பந்தம் என அழைக்கப்படுகின்றன. போர் காலங்களில் பரஸ்பரம் உதவுவது மெக்கா ஒப்பந்தத்தின் நோக்கமாகும். பத்ர் ஒப்பந்தம் கூட்டு ஆயுத உற்பத்தி, ராணுவத் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் ராணுவப் பயிற்சியை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில் துருக்கி, இந்தோனேசியா, பாகிஸ்தான், கத்தார் ஆகிய நாடுகள் கடந்த வாரம் கையெழுத்திட்டன.