
திருவனந்தபுரம், நவ. 21-
கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை ஒரே நாளில் சுமார் 60,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மண்டல பூஜை சீசன் தொடங்கியுள்ள நிலையில், நாளுக்கு நாள் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பக்தர்கள் அதிக அளவில் திரண்டுவருவதால், கூட்ட நெரிசலைத் தவிர்க்க கேரள அரசும் தேவசம் போர்டும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதன்படி, சபரிமலையில் தினமும் அதிகபட்சமாக 80,000 பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இதில், ஆன்லைன் முன்பதிவு மூலம் 66,000 பக்தர்களும், உடனடி முன்பதிவு மூலம் 14,000 பக்தர்களும் தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தரிசனத்துக்காக முன்பதிவு செய்யும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், கோவில் வளாகம் மற்றும் பக்தர்கள் கூடும் பகுதிகளில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி சாமி தரிசனம் செய்வதை உறுதி செய்ய சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், சன்னிதானத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்காமல் இருப்பதற்காக, அவர்களின் வருகைக்கு ஏற்ப 18-ம் படி ஏற அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை கண்காணிக்கப்படுகிறது. இதன்படி, நிமிடத்திற்கு சுமார் 75 பக்தர்கள் வீதம் 18-ம் படி ஏற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தரிசனத்தை ஒழுங்குபடுத்தவும், பக்தர்கள் சிரமமின்றி முன்னேறிச் செல்லவும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
















