Home தலைப்பு செய்தி சித்தராமையா ராஜினாமா

சித்தராமையா ராஜினாமா

பெங்களூரு: மே 27-
முதலமைச்சர் சித்தராமையா நாளை தனது பதவியை ராஜினாமா செய்கிறார். நாளை காலை அமைச்சர்களுக்கு சிற்றுண்டி விருந்து அளித்து ஆலோசனை நடத்திய பிறகு பத்திரிகையாளர்களை சந்திக்கிறார். அதன் பின்னர் கவர்னர் மாளிகை சென்று கவனத்த சந்தித்து ராஜினாமா கடிதம் வழங்குகிறார்
கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த முதலமைச்சர் நாற்காலி விவகாரத்தில் தற்போது அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் மேலிடத்தின் உத்தரவுக்கு இணங்க, முதலமைச்சர் சித்தராமையா நாளை தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் நேற்று டெல்லியில் அவசர ஆலோசனை நடத்திய சித்தராமையா, நேற்றிரவே பெங்களூரு திரும்பினார். ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின்படி, நாளை அவர் தனது முதலமைச்சர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்கிறார். நாளை காலை 9 மணிக்கு முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான ‘காவேரி’யில் அனைத்து அமைச்சர்களுக்கும் சித்தராமையா காலை உணவு விருந்து அளிக்கிறார். இந்த கூட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகிறார். செய்தியாளர்கள் சந்திப்பு முடிந்ததும், நேராக ஆளுநர் மாளிகைக்கு (ராஜ்பவன்) செல்லும் சித்தராமையா, ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டைச் சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்குகிறார்.
நாளை நடக்கும் இந்த காலை உணவு கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அனைத்து அமைச்சர்களுக்கும் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் ராகுல் காந்தியுடன் நடந்த பேச்சுவார்த்தை விவரங்களை அமைச்சர்களிடம் பகிர்ந்து கொள்ளும் அவர், தான் பதவி விலகும் முடிவையும் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்று தெரிகிறது. கடந்த 3 ஆண்டுகளாக மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தோள் கொடுத்த அனைத்து அமைச்சர்களுக்கும் சித்தராமையா நன்றி தெரிவிக்க உள்ளதால், இந்த கூட்டம் அவரது விடைபெறும் கூட்டமாகவே பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் சித்தராமையா நாளை ஆளுநரிடம் ராஜினாமா கடிதத்தை வழங்கிய பிறகு, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் புதிய சட்டமன்றக் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் புதிய சட்டமன்றக் கட்சித் தலைவராக (முதலமைச்சராக) தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா மற்றும் கே.சி.வேணுகோபால் ஆகியோர் இன்று மதியம் டெல்லியிலிருந்து பெங்களூரு வருகின்றனர். அவர்கள் வந்த பிறகு சட்டமன்றக் கட்சி கூட்டத்திற்கான தேதி முறைப்படி அறிவிக்கப்படும். பெரும்பாலும் வருகிற வெள்ளிக்கிழமை இக்கூட்டம் நடப்பது நிச்சயம் எனத் தெரிகிறது.
மேலிடத்தின் செய்தியோடு வரும் பொதுச்செயலாளர்கள், சட்டமன்றக் கட்சி கூட்டத்தில் மேலிடத்தின் முடிவை அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் விளக்கி, டி.கே.சிவக்குமாரை தலைவராகத் தேர்ந்தெடுக்கும் தீர்மானத்தை முன்வைப்பார்கள். அனைத்து எம்.எல்.ஏ.க்களின் ஒப்புதலைப் பெறும் நடைமுறைகளும் அப்போது நடக்கும்.
இதனைத் தொடர்ந்து, புதிய சட்டமன்றக் கட்சித் தலைவர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவதுடன், பதவிப் பிரமாண தேதியையும் முடிவு செய்வார்.
புதிய முதலமைச்சர் பதவி ஏற்பதற்கான சுப முகூர்த்த நேரத்தைக் குறிக்க டி.கே.சிவக்குமாரின் ஆதரவாளர்கள் ஏற்கனவே பல ஜோதிடர்களை அணுகியுள்ளனர். டி.கே.சிவக்குமார் பெரிதும் நம்பும் திப்தூரின் காடசித்தேஸ்வரா மடத்து அய்யாவின் அறிவுறுத்தலின்படி சுப முகூர்த்த நேரம் குறிக்கப்படும் என்றும், வரும் திங்கட்கிழமை புதிய முதலமைச்சரின் பதவி ஏற்பு விழா பிரம்மாண்டமாக நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.
கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையாவை மாற்றிவிட்டு, புதிய முதலமைச்சரை நியமிக்க காங்கிரஸ் மேலிடம் பச்சைக்கொடி காட்டியுள்ள நிலையில், அடுத்த முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள டி.கே.சிவக்குமார் டெல்லியிலேயே முகாமிட்டுள்ளார். அவர் நாளைதான் பெங்களூரு திரும்புவார் என்று கூறப்படுகிறது.
அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர்களுடன் இன்று மதியமே அவர் பெங்களூரு வர வேண்டியிருந்த போதிலும், டெல்லியில் உள்ள பிற முக்கிய தலைவர்களைச் சந்திப்பதற்காக அவர் தனது பயணத்தை ஒத்திவைத்துள்ளார். நாளை காலை டெல்லியிலிருந்து பெங்களூரு வரும் டி.கே.சிவக்குமார், சித்தராமையா ஏற்பாடு செய்துள்ள அமைச்சர்களின் காலை உணவு கூட்டத்தில் நேரடியாகக் கலந்துகொள்வார் எனத் தெரிகிறது.