Home மாவட்டங்கள் பெங்களூர் பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு

பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்வு

சென்னை: மே 27-
நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு கட்டங்களில் கணிசமாக உயர்ந்து வரும் நிலையில், இன்றும் விலை உயர்வு தொடர்ந்துள்ளது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.108.20க்கும், டீசல் ரூ.99.98க்கும் விற்பனையாகிறது. இன்று பெட்ரோல் லிட்டருக்கு 33 பைசாவும், டீசல் லிட்டருக்கு 32 பைசாவும் உயர்ந்துள்ளது
கடந்த மே 15 அன்று நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டது. அதன் பின்னர் மே 19, மே 23, மே 25 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக விலை உயர்வுகள் அறிவிக்கப்பட்டன. இந்த ஐந்தாவது உயர்வுடன், மே 15 முதல் இன்று வரை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு சுமார் ரூ.7.50 வரை விலை அதிகரித்துள்ளது.
இது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்வு, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்றம், ஈரான் தொடர்பான பிரச்னைகள் உள்ளிட்ட காரணங்களால் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் (IOCL, BPCL, HPCL) நாளொன்றுக்கு ரூ.1,000 முதல் ரூ.1,600 கோடி வரை இழப்பை சந்தித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த இழப்புகளை ஈடுகட்டும் வகையில் விலை உயர்வு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மே 15-க்கு முன்பு சென்னையில் பெட்ரோல் சுமார் ரூ.100.90க்கும், டீசல் ரூ.92.60க்கும் விற்கப்பட்டது. ஒரு மாதத்தில் ஏற்பட்டுள்ள உயர்வு பொதுமக்களின் செலவுகளை கணிசமாக அதிகரித்துள்ளது. இதேவேளையில், சென்னையில் ஒரு கிலோ சி.என்.ஜி. எரிவாயு ரூ.95க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலைக்கு நிகரான இந்த விலை, சி.என்.ஜி. பயன்பாட்டாளர்களையும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.