
பெங்களூரு: மே 27-
ஆப்பிரிக்காவில் மிகத் தீவிரமாகப் பரவி வரும் எபோலா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், உகாண்டாவிலிருந்து அகமதாபாத் வழியாகப் பெங்களூர் வந்த 28 வயது இளம் பெண் ஒருவருக்கு எபோலா அறிகுறிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அவர் அங்குள்ள அரசு மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அவசரமாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பிற்குப் பிறகு இப்போது எபோலா வைரஸ் மிக மோசமான ஒரு பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பல ஆப்பிரிக்க நாடுகளில் இது வேகமாகப் பரவி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுவோரில் கிட்டத்தட்ட 50 முதல் 90% பேர் உயிரிழக்கலாம் என்பதால் உலக நாடுகள் எபோலா பரவலை உற்றுக் கவனித்து வருகின்றன.
எபோலா பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படுகிறார்கள். அதன்படி உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த அந்தப் பெண் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். பெங்களூர் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த அவர் இப்போது அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணுக்கு எபோலா அறிகுறிகள் எதுவும் இல்லை. ஆனால், அறிகுறிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் காரணமாகவே அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அந்தப் பெண்ணுக்கு லேசான உடல் வலி மட்டுமே உள்ளது.. தற்போதைக்கு அவர் சீரான உடல்நிலையுடன் உள்ளார். அவரது ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள தேசிய நச்சுயிரியல் நிறுவனத்திற்கு அவசரமாக அனுப்பப்பட்டுள்ளன.. பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. இருப்பினும், “இந்தியாவில் இதுவரை யாருக்கும் எபோலா பாதிப்பு அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை” என மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.
காங்கோ மற்றும் உகாண்டாவில் பரவி வரும் இந்த எபோலா வைரஸ், வரலாற்றிலேயே மூன்றாவது மிக பெரிய எபோலா அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் அதானோம் திங்கள்கிழமை வெளியிட்ட அதிர்ச்சித் தகவலின்படி, இந்த வைரஸ் பாதிப்பால் ஆப்பிரிக்காவில் இதுவரை 220 பேர் பலியாகியுள்ளனர். இதற்கு எதிராக இன்னும் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் இல்லாததால், இது சர்வதேசப் பொதுச் சுகாதார அவசரநிலையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிரிக்காவின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து, மத்திய அரசு உடனடியாக சர்வதேச விமான நிலையங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ விடுத்துள்ளது. காங்கோ, உகாண்டா மற்றும் தெற்கு சூடான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் தீவிரக் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அறிகுறிகள் காய்ச்சல், வாந்தி, விவரிக்க முடியாத ரத்தப்போக்கு அல்லது கடுமையான தலைவலி உள்ள பயணிகள், இமிக்ரேஷன் முடிக்கும் முன்பே அங்கிருக்கும் விமான நிலைய சுகாதார அதிகாரிகளிடம் தங்களைப் பற்றித் தெரிவிக்க வேண்டும். எபோலா வைரஸ் உடலுக்குள் நுழைந்து அறிகுறிகளை வெளிப்படுத்த அதிகபட்சமாக 21 நாட்கள் ஆகும் என்பதால், இந்த நாடுகளிலிருந்து வரும் பயணிகள் தங்களை 21 நாட்களுக்குத் தனிமைப்படுத்திக் கொண்டு சுய கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவமனை நவீன விமானப் போக்குவரத்து மூலம் ஒரு கிருமி சில மணிநேரங்களில் கண்டம் விட்டு கண்டம் பாய முடியும் என்பதால், சர்வதேச விமான நிலையங்கள் தான் வைரஸ் பரவ செக் போஸ்ட்டுகள் ஆகும். இருப்பினும், சார்ஸ், கோவிட்-19 போன்ற கடந்தகாலப் பெருந்தொற்று ஆய்வுகளின்படி, ‘தெர்மல் ஸ்கிரீனிங்’ மூலம் மட்டுமே 100% வைரஸ் பரவலைத் தடுத்து நிறுத்த முடியாது. ஏனெனில், அறிகுறிகள் இல்லாத Asymptomatic பயணிகள் தெர்மல் ஸ்கிரீனிங்கில் எஸ்கேப் ஆக வாய்ப்புள்ளது.


















