Home மாவட்டங்கள் பெங்களூர் சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 20 ஆண்டு சிறை

பெங்களூரு, நவ. 27-
இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய 14 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட மைலசந்திரா பகுதியைச் சேர்ந்த ஒருவர் இதுகுறித்து போலீசில் புகார் அளித்திருந்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டின் அருகே உள்ள ஹார்டுவேர் கடையில் வேலை பார்த்து வந்த வாலிபர் ஒருவர், இன்ஸ்டாகிராம் மூலம் அந்த சிறுமியிடம் பழகியுள்ளார். பின்னர் சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொண்டு நன்றாக பார்த்துக் கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்துள்ளார்.
கடந்த 2024-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந்தேதி மதியம் அந்த சிறுமியை பெட்டதாசனபுரா கிராமம் அருகே வருமாறு அழைத்த அந்த வாலிபர், சிறுமியை ஏமாற்றி தன்னுடன் அழைத்துச் சென்றார். பின்னர் அத்திபெலேயில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து எலக்ட்ரானிக் சிட்டி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரணை நடத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் ஜி.எம். (தற்போது ஜிகனி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்) குற்றவாளியை கைது செய்து, விசாரணையை முடித்து கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார். இந்த வழக்கு பெங்களூரு புறநகர் மாவட்ட விரைவு சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது.
அரசு தரப்பில் வக்கீல் லதா கே. ஆஜராகி வாதாடினார். விசாரணையின் போது குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், நீதிபதி அனுபமா லட்சுமி பி. கடந்த 2026-ம் ஆண்டு நவம்பர் 23-ந்தேதி தீர்ப்பு வழங்கினார். அதில், குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.40 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அத்துடன் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும் ஆணையிட்டார்.
இந்த வழக்கில் சாட்சிகளை சரியான நேரத்தில் கோர்ட்டில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த இன்ஸ்பெக்டர் நவீன் ஜி.எம்., எலக்ட்ரானிக் சிட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசாருதீன் மற்றும் போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.