Home செய்திகள் உலக செய்திகள் சில்வர்ஸ்டோனில் அஜித்துடன் ரேஸ் காரில் விஜய்

சில்வர்ஸ்டோனில் அஜித்துடன் ரேஸ் காரில் விஜய்

லண்டன்: செப்.15-
தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் விஜய் லண்டன் சென்றுள்ளார். கடந்த 10-ந் தேதி இரவு சென்னையில் இருந்து விமானத்தில் புறப்பட்ட அவர், மறுநாள் லண்டன் சென்றடைந்தார். இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக, நடிகர் அஜித்குமார் பங்கேற்கும் கார் பந்தய தொடக்க நிகழ்ச்சியும் இடம்பெற்றிருந்தது.
புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் பந்தயத் திடலுக்கு முதல்-அமைச்சர் விஜய் கடந்த சனிக்கிழமை சென்றார். அங்கு அஜித் பங்கேற்ற மிக்செலின் லீ மான்ஸ் கோப்பை கார் பந்தயத்தை விஜய் பச்சைக் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து, கார்கள் மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்தன. இந்தப் பந்தயத்தில் அஜித் அணி 38-வது இடத்தைப் பிடித்தது.
இந்த நிலையில், சில்வர் ஸ்டோன் சர்க்யூட்டில் அஜித்துடன் இருந்த வீடியோவை முதல்-அமைச்சர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 2.53 நிமிடங்கள் கொண்ட அந்த வீடியோவில், ரேஸ் கார்கள் குறித்து அங்குள்ள ஒருங்கிணைப்பாளர்களிடமும் வீரர்களிடமும் விஜய் கேட்டறிகிறார். பின்னர், அஜித்துடன் சேர்ந்து ரேஸ் கார் மாதிரியை விஜய் ஓட்டிப் பார்க்கிறார்.மேலும், வீரர்கள் அணியும் கவச உடையை அணிந்துகொண்டு, அதில் ‘ஜோசப் விஜய்’ என்ற பெயருடன், அஜித்துடன் ரேஸ் காரில் பயணம் செய்து விஜய் மகிழ்ந்தார். அப்போது இருவரும் கைகுலுக்கி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முதல்-அமைச்சர் விஜய்க்கு கார் பற்றியும், கார் பந்தயம் குறித்தும் அஜித்குமார் விளக்கிக் கூறினார்.