
பெங்களூரு: செப். 10-
‘பாரத ரத்னா’ விருது பெற்ற பிரபல விஞ்ஞானி சி.என்.ஆர். ராவின் பெயரில் எழுத்துப் பிழை இருப்பதாகக் கூறி, பெங்களூரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியின்போது அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக வெளியான செய்தியைத் தேர்தல் கமிஷன் மறுத்துள்ளது.
அறிவியல் துறையில் சிறப்பாகப் பங்களித்ததற்காக நாட்டின் மிக உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது பெற்றவர் விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ், 92. கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர்.
கர்நாடகத்தில் எஸ்.ஐ.ஆர். எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி நடைபெற்று முடிந்துள்ளது. ஆகஸ்ட் 23ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், பல்வேறு காரணங்களுக்காக ஒரு கோடி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பெங்களூரு மல்லேஸ்வரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வாக்காளராக உள்ள பேராசிரியர் சி.என்.ஆர். ராவின் பெயரில் முரண்பாடு இருப்பதாகக் கூறி, அவருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதாக செய்தி வெளியானது.
இந்தச் செய்தியை மறுத்து தேர்தல் கமிஷன் அதிகாரிகள் கூறியதாவது:கடந்த 2002ஆம் ஆண்டு பட்டியலில் விஞ்ஞானி சி.என்.ஆர். ராவின் பெயர் ‘ராமா’ எனப் பதிவு செய்யப்பட்டிருந்தது. தற்போது, ‘புரொப். சி.என். ராவ் எம்.’ என்ற பெயரில் அது உள்ளது. முரண்பாடு காணப்பட்டாலும், அவர் மதிப்புமிக்க நபர் என்பதன் அடிப்படையில், அவரது பெயரை இறுதி வாக்காளர் பட்டியலில் சேர்க்கும்படி வாக்குச்சாவடி நிலை அலுவலர் பரிந்துரை செய்துள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.












