
வாஷிங்டன்: செப். 10-
அமெரிக்க தேர்தலுக்குப் பிறகு ஈரான் போர் உடனடியாக முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன் என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நிருபர்களிடம் டிரம்ப் கூறியதாவது:
ரஷ்ய அதிபர் புடினுடன் மிகச் சிறந்த உரையாடல் நடைபெற்றது. அவர் ஓர் ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புகிறார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் ஒப்பந்தம் செய்ய விரும்பினால், அது மிகவும் நன்றாக இருக்கும். ஆனால், ஒருவரையொருவர் வெறுக்கும் இருவரால்தான் இதில் தாமதம் ஏற்படுகிறது. ஈரானால் இனிமேலும் தாக்குப்பிடிக்க முடியாது. அமெரிக்க தேர்தலுக்குப் பிறகு ஈரான் போர் உடனடியாக முடிவுக்கு வரும் என்று நம்புகிறேன். தேர்தல் ஓட்டெடுப்பில் பாதிப்பை ஏற்படுத்த ஈரான் தீவிரமாக முயற்சி செய்கிறது. நாங்கள் ஈரானின் ஒன்பது கப்பல்களைச் செயலிழக்கச் செய்துள்ளோம். அவற்றில் பல முற்றிலுமாகச் சிதைந்துவிட்டன. அந்தத் தாக்குதல்களுக்கு நாங்களே காரணம் என்று நான் சொல்வேன்.
மேலும், இதுபோன்ற பல நிகழ்வுகளை நீங்கள் காணவிருக்கிறீர்கள். நான் வெறும் அணுசக்தி ஒப்பந்தத்தைவிட அதிகமானவற்றைச் செய்து வருகிறேன். இதில் அணுசக்தி சார்ந்த விஷயங்களைத் தாண்டி இன்னும் பல அம்சங்கள் உள்ளன. அணுசக்தி ஒப்பந்தம் நிச்சயம் இடம்பெறும்; அது 99.9 சதவீதம் உறுதி. ஆனால், மூன்று மாதங்களுக்கு முன்பு பரிசீலனையில் இல்லாத பல விஷயங்களும் இப்போது பேச்சுவார்த்தையில் இடம்பெற உள்ளன.
இவ்வாறு டிரம்ப் கூறினார்.
அதிபரின் பதவிக்காலத்தில் பாதி முடிந்த நிலையில், பார்லிமென்ட், செனட் உறுப்பினர் பதவிகளுக்கும், பல மாநில கவர்னர், மேயர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பதவிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும். இந்த ஆண்டு நவம்பரில் தேர்தல் நடத்தப்பட உள்ளது. அதைத்தான் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.














