
பெய்ஜிங், ஜூன் 24- சீனாவில் கியூஆர் கோடு அட்டையுடன் ஒரு ரோபோ தெருவில் மண்டியிட்டு யாசகம் கோரும் வீடியோ வைரலாக பரவிவருகிறது. சீனாவின் ஹாங்சோ நகரை தலைமையிடமாகக் கொண்டு யூனிட்ரீ ரோபோடிக்ஸ் என்ற நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் மனித வடிவிலான ரோபோக்களை உற்பத்தி செய்து வருகிறது. ஒரு ரோபோவின் ஆரம்ப விலை ரூ.16 லட்சமாக உள்ளது. இந்த ரோபோக்கள் பெரும்பாலும் வீட்டு உபயோக பணிகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன. தீயணைப்பு உள்ளிட்ட பேரிடர் மீட்புப் பணிகளிலும் இவை ஈடுபடுத்தப்படுகின்றன. யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறுவனம் தனது ரோபோக்களை மக்களிடம் பிரபலப்படுத்த நூதன விளம்பரத்தை மேற்கொண்டு வருகிறது. இதன்படி சீனாவின் சிச்சுவான் மாகாண தலைநகர் செங்டூவின் பிரதான சாலையில் யூனிட்ரீ நிறுவனத்தின் ஒரு ரோபோ, கியூஆர் கோடு அட்டையுடன் யாசகம் கோரி வருகிறது. இந்த ரோபோ மண்டியிட்டு அமர்ந்து, கைகளை கூப்பி யாசகம் கோருகிறது. ‘‘மின்சார கட்டணத்தை செலுத்த பணம் இல்லை. எனவே யாசகம் அளித்து உதவுங்கள்’’ என்று ரோபா உருக்கமாக கூறுகிறது. யாசகம் எடுக்கும் இந்த ரோபாவின் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செங்டூ மட்டுமன்றி தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட நகரங்களிலும் யூனிட்ரீ ரோபோடிக்ஸ் நிறுவனம் சார்பில் இதே பாணியில் நூதன விளம்பரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



















