
விழுப்புரம்: நவ. 14-
செஞ்சியில் காணாமல் போன சிறுமியை வனப் பகுதிகளில் மோப்ப நாய் உதவியுடன் சிபிசிஐடி போலீஸார் தேடியும் எந்தத் தடயமும் சிக்கவில்லை.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி ஊராட்சி நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, காணாமல் போன வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். டிஐஜி விக்ரமன், எஸ்பி ஜவகர் உள்ளிட்டோர் கடந்த 23 நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு உதவியாக விழுப்புரம் மாவட்ட சைபர் பிரிவு போலீஸாரும் செயல்படுகின்றனர்.
செல்போன் டவரில் பதிவான எண்கள், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மற்றும் சந்தேக நபர்கள், சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள், சிறுமியின் பெற்றோர், உறவினர் என நூற்றுக்கணக்கான நபர்களிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தியும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஆலம்பூண்டி மற்றும் அருகே உள்ள வனப் பகுதியில் வனத்துறையினருடன் இணைந்து சிபிசிஐடி போலீஸார் நேற்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர். 2 போலீஸ் மோப்ப நாய்களும் அழைத்துச் செல்லப்பட்டன. சிறுவாடி காப்புக்காடு உட்பட வனப் பகுதியில் உள்ள புதர்கள் மற்றும் பாறைகளுக்கு இடையே உள்ள பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இருப்பினும், சிறுமியின் நிலை குறித்து எந்த தடயமும் கிடைக்கவில்லை. சிறுமி மாயமாகி 33 நாட்கள் கடந்த பிறகும், விடை கிடைக்காததால் சிபிசிஐடி போலீஸாரும் விழிபிதுங்கி நிற்கின்றனர்.













