Home மாவட்டங்கள் சென்னை சென்னையில் 1.50 லட்சம் தெருநாய்களுக்கு தடுப்பூசி

சென்னையில் 1.50 லட்சம் தெருநாய்களுக்கு தடுப்பூசி

சென்னை: அக். 23-
சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து தெருநாய்களுக்கும் வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தும் சிறப்பு முகாம்கள் கடந்த ஆக. 11-ம் தேதி தொடங்கப்பட்டன.
முதற்கட்டமாக திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க. நகர், அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், ஆலந்தூர், பெருங்குடி ஆகிய மண்டலங்களில் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசியும், அக மற்றும் புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்தும் செலுத்தப்பட்டன.
தொடர்ந்து, தற்போது வளசரவாக்கம், அடையாறு, சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் தடுப்பூசி மற்றும் மருந்து செலுத்தும் முகாம்கள் நடைபெற்று வருகின்றன. இதில் வளசரவாக்கம் மண்டலத்தில் 3,943 தெருநாய்களுக்கும், அடையாறு மண்டலத்தில் 3,985 தெருநாய்களுக்கும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 4,153 தெருநாய்களுக்கும் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.கடந்த ஆக. 11 முதல் அக். 21-ம் தேதி வரை நடைபெற்ற சிறப்பு முகாம்கள் மூலம், சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மொத்தம் 1,50,303 தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதுடன், அக மற்றும் புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்தும் வழங்கப்பட்டுள்ளது. என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.