
சென்னை, அக். 22-
சென்னை ஐ.சி.எப். ஆலையில் தயாரிக்கப்பட்ட 12 பெட்டிகளைக் கொண்ட முதல் ஏசி மின்சார ரயில் சேவை கடந்த ஆண்டு ஏப். 19-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த ரயில் தற்போது சென்னை கடற்கரை–செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், 12 பெட்டிகளைக் கொண்ட 2-வது ஏசி மின்சார ரயில் சேவை சென்னை சென்ட்ரல்–அரக்கோணம் இடையே நாளை (அக். 23) முதல் தொடங்குகிறது. இந்த ரயில் சேவை அக். 23-ம் தேதி முதல் டிச. 24-ம் தேதி வரை வாரத்தில் 5 நாட்கள் இயக்கப்பட உள்ளது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் ரயில் இயக்கப்படாது. சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்படும் ரயில், இரவு 7.20 மணிக்கு திருவள்ளூர் நிலையத்தை அடையும். அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.55 மணிக்கு அரக்கோணம் சந்திப்பைச் சென்றடையும். மறுமார்க்கத்தில், அரக்கோணத்தில் இருந்து காலை 8 மணிக்கு புறப்படும் ரயில், காலை 8.30 மணிக்கு திருவள்ளூர் நிலையத்தையும், காலை 9.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தையும் வந்தடையும். இந்த ரயில் திருவாலங்காடு, கடம்பத்தூர், திருவள்ளூர், திருநின்றவூர், வில்லிவாக்கம், பெரம்பூர், பேசின்பிரிட்ஜ் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இதற்கு முன்பாக, இதே சேவையின் ஒரு ரயில் ஆவடியில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட்டு, காலை 7.45 மணிக்கு அரக்கோணத்தைச் சென்றடையும் வகையில் இயக்கப்படுகிறது. மேலும், மற்றொரு சேவை சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 9.40 மணிக்கு புறப்பட்டு, காலை 10.25 மணிக்கு ஆவடி நிலையத்தை அடையும். பின்னர், ஆவடியில் இருந்து மாலை 5.25 மணிக்கு புறப்படும் அந்த ரயில், மாலை 6.10 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையத்தை வந்தடையும்.















