
சென்னை, நவ. 29-
சென்னை பாடி, அக்சயா காலனி பகுதியைச் சேர்ந்த வைரவன் (72) என்பவரிடம், டிஜிட்டல் அரெஸ்ட் செய்வதாக மிரட்டி ரூ.60.70 லட்சம் மோசடி செய்ததாக 3 பேரை ஆவடி காவல் ஆணையரக இணையவழி குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.வைரவனை தொலைபேசியில் தொடர்புகொண்ட மர்ம நபர்கள், தாங்கள் மும்பை போலீஸார் என அறிமுகப்படுத்திக் கொண்டனர். வைரவனின் ஆதார் அட்டையைப் பயன்படுத்தி சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகவும், அவரிடம் உள்ள பணம் சட்டப்பூர்வமானது என்பதை நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இதற்காக, தாங்கள் தெரிவிக்கும் வங்கிக் கணக்குகளுக்கு அவரிடம் உள்ள மொத்தப் பணத்தையும் உடனடியாக அனுப்ப வேண்டும் என்றும், பணத்தைச் சரிபார்த்த பின்னர் அதே தொகை அவரது வங்கிக் கணக்குக்குத் திருப்பி அனுப்பப்படும் என்றும் கூறினர். பணத்தை அனுப்பாவிட்டால் வங்கிக் கணக்குகளை முடக்கி, டிஜிட்டல் அரெஸ்ட் செய்ய நேரிடும் எனவும் அவர்கள் மிரட்டினர். இதனால் அச்சமடைந்த வைரவன், அவர்கள் தெரிவித்த வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் ரூ.60.70 லட்சத்தை அனுப்பியுள்ளார். ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட மர்ம நபர்கள் அதைத் திருப்பி அனுப்பாமல் ஏமாற்றியுள்ளனர். இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வைரவன், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆவடி காவல் ஆணையரக இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் விசாரணை நடத்தினர்.













