Home செய்திகள் தேசிய செய்திகள் டெல்லியில் 25-ந்தேதி காவிரி ஆணைய கூட்டம்

டெல்லியில் 25-ந்தேதி காவிரி ஆணைய கூட்டம்

டெல்லி, நவ. 21-
தமிழ்நாடு மற்றும் கர்நாடகம் இடையேயான காவிரி நீர் பகிர்வு விவகாரம் தொடர்பாக, டெல்லியில் வரும் 25-ந்தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நடைபெற உள்ளது. காவிரி நீர் பகிர்வு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அவ்வப்போது கூடி வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது. மேலும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவும், காவிரி நீர் மேலாண்மை ஆணையமும் கூடி, தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக விவாதித்து வருகின்றன.வடகிழக்கு பருவமழை குறைந்து வரும் நிலையில், டெல்டா மாவட்டங்களின் பாசனத் தேவையைப் பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் காணொலி காட்சி வாயிலாகப் பங்கேற்றனர். தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 2,000 கனஅடி நீர் திறந்துவிட வேண்டும் என்று கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது. இதற்கு முன்பு, கடந்த 6-ந்தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில், காவிரியில் இருந்து வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க உத்தரவிடப்பட்டிருந்தது.இந்த இரு உத்தரவுகளையும் கர்நாடக அரசு பின்பற்றவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தின் பாசனத் தேவையைப் பூர்த்தி செய்வதில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இந்தச் சூழ்நிலையில், டெல்லியில் வரும் 25-ந்தேதி நடைபெற உள்ள காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இக்கூட்டத்தில், காவிரியில் இருந்து தமிழகத்துக்குத் தேவையான நீரை உடனடியாகத் திறந்துவிடுமாறு கர்நாடக அரசுக்கு ஆணையம் அறிவுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.