
சென்னை: செப். 17-
தமிழக அரசுப் பணியில் 10 முதல் 18 ஆண்டுகள் வரை பணியாற்றி ஓய்வுபெற்றவர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமான டேப்ஸ் திட்டத்தில், இடைக்கால நிவாரணத் தொகை ரூ.10 ஆயிரமாகவும், அதற்குரிய அகவிலைப் படியுடனும் நிர்ணயிக்கப்பட்டதற்கு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கடந்த ஜனவரி 1-க்குப் பிறகு ஓய்வுபெற்றவர்களுக்கு டேப்ஸ் இடைக்கால நிவாரணத் தொகை கணக்கிடுவது, அரசின் நிதி அமைச்சகச் செலவினத் துறைச் செயலர் என்.வெங்கடேஷ், கருவூலக் கணக்குத் துறை இயக்குநருக்கு கடந்த 11-ம் தேதி அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு மேலும், 18 ஆண்டுகளுக்குள் பணியாற்றி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு டேப்ஸ் திட்டத்தில் இடைக்கால நிவாரணமாக ரூ.10 ஆயிரமும் அதற்குரிய அகவிலைப் படியும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டேப்ஸ் விதிகளும் நடைமுறைகளும் அறிவிக்கப்பட்ட பின்னர், தகுதியான பணிக்காலத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் அனுமதிக்கத்தக்க தொகை கணக்கிடப்படும். அதில் ஏற்படும் வித்தியாசம் நிலுவைத் தொகையாக வழங்கப்படும்.
18 ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் பணியாற்றி ஓய்வுபெற்றோருக்கு, அவர்கள் கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது ரூ.10 ஆயிரம் ஆகியவற்றில் எது அதிகமோ, அந்தத் தொகை அதற்குரிய அகவிலைப் படியுடன் சேர்த்து இடைக்கால நிவாரணமாக வழங்கப்படும்.அதேவேளையில், 18 ஆண்டுகளுக்குக் குறைவாகப் பணியாற்றியவர்களுக்கு, கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் என்ற அளவில் டேப்ஸ் இடைக்கால நிவாரணம் ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டிருந்தால், அகவிலைப்படி உள்ளிட்டுக் வழங்கப்பட்ட கூடுதல் தொகை செப்டம்பர் முதல் இடைக்கால நிவாரணத் தொகையிலிருந்து 10 தவணைகளில் பிடித்தம் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.













