
பெங்களூரு, செப். 16- உலகப் புகழ்பெற்ற மைசூரு தசரா விழா தொடங்க இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், மைசூருவில் விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் எனப்படும் தசரா ஊர்வலம் அடுத்த மாதம் 21-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தசரா ஊர்வலத்தையும், அதைத் தொடர்ந்து நடைபெறும் அலங்கார அணிவகுப்பு வண்டிகளின் ஊர்வலத்தையும் அரண்மனை முன்பு அமர்ந்து கண்டு ரசிப்பதற்காக தங்க அட்டை, அதாவது கோல்டு கார்டு, வினியோகம் செய்யப்பட உள்ளது. ரூ.2 ஆயிரம் மதிப்பிலான தங்க அட்டையை வாங்கினால், அரண்மனை முன்பு அமர்ந்து தசரா ஊர்வலத்தை நேரில் கண்டு ரசிக்கலாம் என்று மைசூரு கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி தெரிவித்துள்ளார். இதற்கிடையே, தசரா ஊர்வலத்தில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் உள்பட தென்மாநில முதல்-மந்திரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து மைசூரு கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி, தசரா ஊர்வலத்தில் தமிழக முதல்-அமைச்சர் விஜய் உள்பட தென்மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்பது குறித்து முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் முடிவு செய்வார் என்றார். இதுதொடர்பாக முதல்-மந்திரி மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். தென்மாநில முதல்-மந்திரிகள் தசரா ஊர்வலத்தில் பங்கேற்பார்களா என்பது குறித்து முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும் கலெக்டர் லட்சுமிகாந்த் ரெட்டி கூறினார்.













