
புதுடெல்லி: அக். 7-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது, அனுமதியின்றி அகில இந்திய வானொலி அலுவலகத்துக்குள் நுழைந்ததாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
எஸ்.ஐ.ஆர். விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தன்னிச்சையாகச் செயல்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. தேர்தல் ஆணையர்களின் நிலைப்பாட்டுக்கு மாறாக அவர் செயல்பட்டதாகவும், வாக்குகள் திருடப்பட்டுள்ளதாகவும் கூறி, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தேர்தல் ஆணைய அலுவலகம் நோக்கி நேற்று பேரணியாகச் சென்றனர். பேரணிக்கு உரிய அனுமதி பெறப்படவில்லை என்று கூறி, அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து ராகுல் காந்தி உள்ளிட்ட எம்.பி.க்கள் அகில இந்திய வானொலி நிலைய வளாகத்துக்குள் நுழைந்தனர். அங்கிருந்து தேர்தல் ஆணைய அலுவலகத்துக்குச் செல்ல எதிர்க்கட்சிகள் திட்டமிட்டிருந்ததாக கூறப்படுகிறது. தடையை மீறிச் செல்ல முயன்றதாகக் கூறி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோரை போலீஸார் கைது செய்து, அகில இந்திய வானொலி அலுவலக வளாகத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினர். பின்னர் காவலில் வைக்கப்பட்ட ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் இரவில் விடுவிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, ஆகாஷ் வானொலி நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மீது நாடாளுமன்ற வீதி காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை தொடங்கியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
மேலும், ஞானேஷ் குமாரை பதவி நீக்கக் கோரி ஜனாதிபதியைச் சந்திக்க இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளனர். இதற்காக ஜனாதிபதி அலுவலகத்தில் நேரம் கோரப்பட்டுள்ளது.













