Home செய்திகள் தேசிய செய்திகள் தனியார் பிராண்ட் பெயரில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை

தனியார் பிராண்ட் பெயரில் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை

புதுடெல்லி, ஆக. 13- தனியார் பிராண்ட் பெயரில், தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நாட்டில் முதல்முறையாக தொடங்கப்பட உள்ளது. வணிக விளம்பரத்திற்காக நிறுவனங்களின் பெயர்கள் விளம்பரத்துடன் ரயில்களை இயக்கும் நடைமுறை பல்வேறு உலக நாடுகளில் உள்ளது. இந்தியாவில் சில நிறுவனங்கள் விளம்பரம் செய்ய ரயில்களை முழுமையாகப் பயன்படுத்துகின்றன. அந்தவகையில், இந்தியாவின் முதல் தனியார் பிராண்ட் பெயரில் ரயில் இயக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ‘ஸ்ப்ரைட்’ தேஜஸ் எக்ஸ்பிரஸ் (Sprite Tejas Express) என்ற பெயரில் தனியார் சேவை இயங்க உள்ளது. இந்த ரயில் லக்னோ மற்றும் டில்லி இடையே இயக்கப்பட உள்ளது. கோகோ கோலா நிறுவனம் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கான விளம்பர பிராண்டிங் உரிமையைப் பெற்றுள்ளது. இதன்படி, 5 எல்.எச்.பி பெட்டிகள் ஸ்ப்ரைட் விளம்பர வடிவமைப்புடன் இயக்கப்படுகின்றன. 6 மாத காலத்திற்கு விளம்பர உரிமம் வழங்கப்பட்டுள்ளது. ஸ்பிரைட் நிறுவனத்திற்கு ஐஆர்சிடிசி அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, இந்த ரயிலை ‘ஸ்பிரைட்’ தேஜஸ் எக்ஸ்பிரஸ் என்று அறிவிக்குமாறு வடகிழக்கு ரயில்வேக்கு அறிவுறுத்தப்பட்டதாக ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. பயணத்தின் இரு திசைகளிலும், ரயில் புறப்படும் மற்றும் வழியில் உள்ள நிலையங்களில் இந்த ரயில் ‘ஸ்பிரைட்’ தேஜஸ் எக்ஸ்பிரஸ் என்று அறிவிக்கப்படும். தேஜஸ் எக்ஸ்பிரஸ் முழுமையான குளிர்சாதன வசதி கொண்ட அதிவேக ரயில், நவீன வசதிகளுடன் கூடியது. பயணத்தின்போது உணவு வகைகள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் ஆகியவை சிறப்பாக உள்ளன என்று ஐஆர்சிடிசிதெரிவித்துள்ளது
‘ஒரு பிராண்டின் பெயரில் ரயில் ஒன்று அழைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். லக்னோ- டில்லி தேஜஸ் எக்ஸ்பிரஸ் ஒரு தனியார் ரயிலாக இருந்தாலும், தண்டவாளங்கள் மற்றும் ரயில் நிலையங்கள் போன்ற உள்கட்டமைப்பைப் பயன்படுத்துவதற்கான கட்டணங்களை இந்திய ரயில்வேக்குச் செலுத்துகிறது,’ என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.