Home மாவட்டங்கள் சென்னை தவெக நிர்வாகி போதைப்பொருள் கடத்தல்- ஸ்டாலின் கண்டனம்

தவெக நிர்வாகி போதைப்பொருள் கடத்தல்- ஸ்டாலின் கண்டனம்

சென்னை: அக். 17–-
நாகையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்றதாகக் கூறப்படும் ரூ.270 கோடி மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 4 பேரையும், பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளையும் வருவாய் புலனாய்வு இயக்கக அதிகாரிகள் நாகை சுங்கத்துறை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களிடம் விடிய விடிய தீவிர விசாரணை நடைபெற்றது.
இந்தச் சம்பவம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்கக அதிகாரிகளால், நாகை மாவட்ட த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார். போதை ‘ஒழிப்பு’ குறித்து முதல்-அமைச்சர் மேடைதோறும் பேசி வருவதை, போதை ‘ஒளிப்பு’ எனத் தவறாகப் புரிந்துகொண்டு, 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்ததே அவரது குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார்” என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சொந்தக் கட்சியிலேயே மிகப்பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினாரா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒரே சோதனையில் இவ்வளவு போதைப்பொருள் சிக்கியுள்ள நிலையில், இதன் பின்னால் மேலும் எத்தனை பேர் உள்ளனர் என்பதைக் கண்டறிந்து, முழு வலையமைப்பையும் சுற்றிவளைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மாவட்டந்தோறும் த.வெ.க.வில் இதுபோன்றவர்கள் எத்தனை பேர் உள்ளனர் என முதலில் கணக்கெடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் ‘பேட் பார்ட்டி’ எனப் பெயரெடுத்த த.வெ.க., தற்போது ‘பிரேக்கிங் பேட் பார்ட்டி’யாக பதவி உயர்வு பெற்றுள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். “பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்” என முதல்-அமைச்சர் இதற்கும் ‘பஞ்ச் டயலாக்’ பேசாமல் இருக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.